
கேரளா மாநிலம், கோட்டயம் மாவட்டம் எட்டுமானூர் அருகே உள்ள ரயில் தண்டவாளத்தில் இன்று காலை ஒரு பெண்ணும் அவரது இரண்டு மகள்களும் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில், போலீசார் விரைந்து வந்து 3 உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், இறந்து கிடந்தவர்கள் 42 வயதான ஷைனி குரியகோஸ் மற்றும் அவரது மகள் 11 வயது அலீனா மற்றும் 10 வயது இவானா என்பது தெரியவந்தது. இந்த மூன்று பேரும், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
கடந்த 9 மாதங்களாக கணவரைப் பிரித்து வசித்து வந்த ஷைனி, தனது மகள்களுடன் தேவாயலத்திற்குச் செல்வதாகக் கூறி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். குடும்பத் தகராறு காரணமாக தற்கொலை செய்திருக்கலாம் என்றும் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.