Published on 20/09/2019 | Edited on 20/09/2019
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம்சாட்டிய பெண்ணுக்கு எதிராக டெல்லி போலீஸில் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால், அந்த வழக்கை முடித்து வைத்திருப்பதாக டெல்லி போலீஸ் அறிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் ரஞ்சன் கோகோய் மீது இந்தப் பெண் பாலியல் புகார் கொடுத்தார். அதைத் தொடர்ந்து அந்தப் பெண் மீது நவீன் குமார் என்பவர் மோசடி வழக்கு பதிவு செய்தார். அதையடுத்து அந்தப் பெண் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், கடந்த மார்ச் 14 ஆம் தேதி அந்தப் பெண்ணுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
இந்நிலையில் அந்தப் பெண்ணுக்கு எதிராக கொடுத்த புகாரின் மீது போலீஸார் முறையாக விசாரணை நடத்தியிருப்பதாகவும், அந்த விசாரணை திருப்தி அளிப்பதாகவும் புகார் கொடுத்த நவீன்குமார் கூறியதாக போலீஸார் தெரிவித்தனர். எனவே, அந்தப் பெண்ணுக்கு எதிராக மேற்கொண்டு கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்றும் நவீன் குமார் கேட்டுக்கொண்டதால் அந்த வழக்கு முடித்து வைக்கப்படுவதாக போலீஸார் தெரிவித்தனர்.