
செல்லமாக வளர்த்த பூனை இறந்ததால், துக்கம் தாங்காமல் 32 வயது பெண் ஒருவர் தற்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசம் மாநிலம், அம்ரோஹா மாவட்டத்தைச் சேர்ந்தவர் பூஜா (32). இவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியைச் சேர்ந்த ஒரு நபரை திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.
அதன் பின்னர், பூஜா தனது தாய் கஜ்ரா தேவி வீட்டில் வசித்து வந்துள்ளார். தனது தனிமையை போக்குவதற்காக செல்லமாக பூனை ஒன்றை பூஜா வளர்த்து வந்துள்ளார். இந்த பூனை, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு எதிர்பாரதவிதமாக உயிரிழந்துள்ளது. இறந்த பூனையை, அடக்கம் செய்ய பூஜாவினுடைய குடும்பத்தினர் அவரிடம் வற்புறுத்தியுள்ளனர். ஆனால், அந்த பூனை மீண்டும் உயிர் பெறும் என்று கூறி நம்பிக்கையோடு இறந்த பூனையை தனது பக்கத்திலேயே இரண்டு நாட்களாக பூஜா வைத்துள்ளார்.
ஆனால், பூஜார் எதிர்பார்த்தபடி பூனை உயிர் பெறாததால், கடந்த 1ஆம் தேதி தனது அறையில் உள்ள மின்விசிறியில் பூஜா தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, இந்த சம்பவத்தை அறிந்த போலீசார், வீட்டிற்கு வந்து பூஜாவினுடைய உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர். பிரேத பரிசோதனை அடிப்படையில் விசாரணை எடுக்கப்படும் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.