Skip to main content

செயினை பறித்த கொள்ளையர்கள்; நடுரோட்டில் புரட்டியெடுத்த இளம்பெண் - வைரலாகும் வீடியோ

Published on 15/12/2022 | Edited on 15/12/2022

 

woman beats up robbers who have snatchedchain road video goes viral

 

செயினைப் பறித்த கொள்ளையர்களை இளம்பெண் ஒருவர் நடுரோட்டில் வைத்து புரட்டியெடுக்கும் சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

 

உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெறும் கொலை, கொள்ளைச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதுவும் மீரட் மாவட்டத்தில் நடக்கும் செயின் பறிப்பு போன்ற சம்பவங்களால் அப்பகுதி மக்கள் ஒருவித பயத்துடனே வீட்டைவிட்டு வெளியே வருகின்றனர். இத்தகைய கொள்ளையர்கள் பெண்களைத்தான் அதிகளவில் குறிவைக்கின்றனர். சாலையில் நடந்து செல்லும் இளம்பெண்களைப் பின்தொடரும் கொள்ளையர்கள், அவர்கள் அணிந்திருக்கும் தங்கச் சங்கலிகளைப் பறித்துக்கொண்டு ஓட்டம் பிடிக்கின்றனர்.

 

இந்நிலையில், மீரட் மாவட்டத்தில் மேலும் ஒரு செயின் பறிப்பு சம்பவம் அரங்கேறியுள்ளது. மீரட் மாவட்டம் மோடி நகரைச் சேர்ந்தவர் சந்தோஷ் தேவி. இவர் தனது பேத்தி ரியாவுடன் கடந்த சனிக்கிழமை மாலை 5 மணியளவில் படா பஜார் பகுதிக்குச் சென்று கொண்டிருந்தார்.

 

அப்போது அந்தப் பகுதிக்கு டூவீலரில் வந்த 2 கொள்ளையர்கள், அந்தப் பெண்களைப் பின்தொடர்ந்து வந்தனர். அந்த சமயம் ஆள்நடமாட்டம் இல்லாத நேரம் பார்த்து அந்த இரண்டு பெண்களிடமும் இருந்த தங்கநகைகளைப் பறித்துக்கொண்ட கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிக்க முயற்சித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் ரியா, அந்தக் கொள்ளையர்களின் டூவீலரைப் பிடித்து இழுத்துள்ளார். அப்போது நிலைதடுமாறிக் கீழே விழுந்தவர்கள் அந்தப் பெண்ணைத் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

 

இந்தச் சம்பவம் முழுவதும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. மேலும், பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த மீரட் போலீசார், கொள்ளையர்களை வலைவீசித் தேடிவந்தனர். காட்டுப்பகுதியில் மறைந்திருந்த கொள்ளையர்களைப் போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது, இருதரப்பினர் இடையே நடந்த துப்பாக்கிச்சூடு மோதலில் 2 கொள்ளையர்களுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, கொள்ளையர்களைக் கைது செய்த போலீசார், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். பட்டப்பகலில் சாலையில் நடந்து சென்ற பெண்களிடம் செயின் பறிக்கப்பட்ட சம்பவம் மீரட் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

 

 

சார்ந்த செய்திகள்