Will Siddaramaiah step down in Muda?- Contest for Chief Ministership

மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் நில ஒதுக்கீடு செய்ததில் 4000 கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாகவும், இதற்கு பொறுப்பேற்று கர்நாடக முதல்வர் சித்தராமையா பதவி விலக வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. சித்தராமையாவின் மனைவி பேரில் 14 வீட்டு மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் மூடா மோசடி வழக்கு என அழைக்கப்படும் இந்த விவகாரம் கர்நாடகா அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.

Advertisment

இத்தகைய சூழலில் தான் ஊழல் தடுப்புச் சட்டம் 1998 சட்டத்தில் 17 வது பிரிவு மற்றும் புதிதாக தற்பொழுது அமலுக்கு வந்திருக்கும் பாரதிய நாகரிக் சுரக் ஷா சம்ஹிதா வழக்கின் சட்டப் பிரிவின் 218வது பிரிவு என இந்த இரண்டு பிரிவுகளின் கீழ் சித்தராமையாவை விசாரிக்க அம்மாநிலத்தின் ஆளுநர் தாவர் சந்த் கெலாட் அனுமதி வழங்கி இருக்கிறார். சித்தராமையா பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி பாஜக, மஜத உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பாதயாத்திரை போராட்டம் நடத்தி வருகின்றனர். அதேநேரம் சித்தராமையாவை விசாரிக்க மாநில ஆளுநர் அனுமதி அளித்துள்ள நிலையில் ஆளுநரின் இந்த உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தைக் கர்நாடக அரசு நாடி இருந்தது.

Advertisment

அதில் இந்த முறைகேடு வழக்கில் முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கர்நாடக உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. மேலும் இது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் ஆகஸ்ட் 29ஆம் தேதி வரை ஒத்திவைக்குமாறு சம்பந்தப்பட்ட கீழ் நீதிமன்றத்தை உயர் நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது. அதோடு இந்த வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 29ஆம் தேதிக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் மூடா முறைகேட்டில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா பதவி விலக வாய்ப்பு இருப்பதாக காங்கிரஸ் கட்சியின் சில தலைவர்களே நினைப்பதாகக் கூறப்படுகிறது. ஒருவேளை இந்த முறைகேடு தொடர்பாக சித்தராமையா தன் பதவியை ராஜினாமா செய்யும் பட்சத்தில் முதல்வர் பதவியைக் கைப்பற்ற பல காங்கிரஸ் தலைவர்கள் திரை மறைவில் முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது கர்நாடக துணை முதலைவராக இருக்கும் டி.கே.சிவகுமார் முதலமைச்சர் பதவி பெற காத்திருப்பதாகவும், அதேபோல் கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வர், பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் ஜார்கெ, தொழில்துறை அமைச்சர் பாட்டில் ஆகியோரும் முதல்வர் பதவியை பெற திரைமறைவில் முயல்வதாக கர்நாடக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisment