ADVERTISEMENT

10 சதவீத இடஒதுக்கீடு: 8 லட்ச ரூபாய் உச்சவரம்பை மறுபரிசீலனை - மத்திய அரசு தகவல்!

02:56 PM Nov 26, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

நீட் தேர்வு அடிப்படையிலான மருத்துவ படிப்பில், அகில இந்திய ஒதுக்கீட்டில், பொருளாதாரத்தில் நலிந்த முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டைப் பெறுவதில் வருமான உச்சவரம்பாக 8 லட்சத்தை நிர்ணயித்து மத்திய அரசு சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது. இதன்மூலம் பொருளாதாரத்தில் நலிந்த முன்னேறிய வகுப்பினரின் குடும்ப வருமானம் 8 லட்சமாகவோ அல்லது அதற்கு மேலாகவோ இருந்தால் 10 சதவீத இடஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பில் சேர முடியாது. அதேபோல் ஓபிசி பிரிவினருக்கு அகில இந்திய மருத்துவ படிப்பில் 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்தது.

இவற்றுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, அது அவ்வப்போது விசாரிக்கப்பட்டுவருகிறது. கடந்த மாதம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது உச்சநீதிமன்ற நீதிபதிகள், "எதை அடிப்படையாக வைத்து பொருளாதாரத்தில் நலிந்த முன்னேறிய வகுப்பினருக்கு 8 லட்ச ரூபாய் உச்சவரம்பாக நிர்ணயிக்கப்பட்டது" என கேள்வியெழுப்பினர்.

மேலும், ஓபிசி இடஒதுக்கீட்டிற்கான கிரீமிலேயர் வரம்பு 8 லட்ச ரூபாயாக இருப்பதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், பொருளாதாரத்தில் நலிந்த முன்னேறிய பிரிவினருக்கு சமூக மற்றும் கல்வி பின்னடைவுகள் இல்லாதபோது, அவர்களுக்கும், அப்பின்னடைவுகளைக் கொண்ட ஓபிசி பிரிவினருக்கும் ஒரே வரம்பு நிர்ணயிக்கப்பட்டது எப்படி எனவும் கேள்வியெழுப்பினர். தொடர்ந்து இரு பிரிவினருக்கும் 8 லட்சம் என்ற ஒரே வரம்பு நிர்ணயிக்கப்பட்டதன் மூலம், சமமற்றவர்களை சமமாக ஆக்குகிறீர்கள் என தெரிவித்த நீதிபதிகள், இதுதொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பி விளக்கம் அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.

இந்தநிலையில், நேற்று (25.11.2021) இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பொருளாதாரத்தில் நலிந்த முன்னேறிய வகுப்பினருக்கு 8 லட்ச ரூபாய் உச்சவரம்பாக நிர்ணயிக்கப்பட்டது குறித்து மறுபரிசீலனை செய்வதாகவும், அதற்காக நான்கு வாரங்கள் அவகாசம் வேண்டுமென மத்திய அரசு கோரியது.

இதனையடுத்து உச்ச நீதிமன்றம், மத்திய அரசுக்கு நான்கு வார அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT