Wife poisons husband to massacre within 36 days of marriage jharkhand

திருமணமான சில நாட்களிலேயே, மேகாலயாவுக்கு தேனிலவு சென்ற போது கணவரை கூலிப்படைகளை வைத்து மனைவி கொலை செய்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கியுள்ள நிலையில், ஜார்க்கண்டில் திருமணமான 36 நாட்களில் கணவருக்கு விஷம் கொடுத்து மனைவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்கண்ட் மாநிலம் ஹர்வா மாவட்டத்தைச் சேர்ந்தவர் புத்நாத் சிங். இவருக்கு, சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள விஷ்ணுபூர் கிராமத்தைச் சேர்ந்த சுனிதா (22) என்ற பெண்ணுடன் கடந்த மே 11ஆம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் முடிந்த மறுநாள் தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்ற சுனிதா, தனது பெற்றோரிடம் புத்நாத்துடன் தனக்கு நடந்த திருமணம் பிடிக்கவில்லை என்றும் இனிமேல் அவருடன் வாழப் போவதில்லை என்றும் கூறியுள்ளார்.

Advertisment

இதையடுத்து, சுனிதாவிடம் அவரது கணவர் புத்நாத்துடன் தொடர்ந்து வாழுமாறு இரு தரப்பில் இருந்தும் வற்புறுத்தியுள்ளனர். இதற்காக கடந்த ஜூன் 5ஆம் தேதி ஒரு பஞ்சாயத்தும் நடைபெற்றுள்ளது. அதில் சுமுகமான பேச்சுவார்த்தை எட்டியதால், சுனிதா தனது கணவர் வீட்டிற்குச் சென்றுள்ளார். இந்த சூழ்நிலையில், நேற்று (16-06-25) அதிகாலை படுக்கையிலேயே புத்நாத் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளார். புத்நாத் இறந்து கிடந்திருப்பதை பார்த்து கதறி அழுத அவரது தாய், சுனிதா மீது போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில், போலீசார் சுனிதாவை பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது.

கடந்த ஜூன் 14ஆம் தேதி புத்நாத்தும் சுனிதாவும் சத்தீஸ்கரில் உள்ள ராமானுஜ்கஞ்ச் சந்தைக்குச் சென்றுள்ளனர். அப்போது விவசாய பயன்பாட்டிற்கு பூச்சிக்கொல்லி மருந்து தேவை என்று கூறி, பூச்சிக்கொல்லி மருந்தை வாங்குமாறு சுனிதா புத்நாத்தை வற்புறுத்தியுள்ளார். அதன்படி, புத்நாத்தும் அந்த மருந்தை வாங்கிக் கொடுத்துள்ளார். இதையடுத்து, ஜூன் 15ஆம் தேதி இரவு, சுனிதா தனது கணவரின் உணவில் அந்த பூச்சிக்கொல்லி மருந்தைக் கலந்ததாகக் கூறப்படுகிறது. அதை சாப்பிட்ட புத்நாத்தும் உயிரிழந்துள்ளார் என்று போலீஸ் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அதனை தொடர்ந்து, புத்நாத்தின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி, சுனிதாவை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.