
தெலுங்கானா மாநிலம் மலக்கோட்டையில் உள்ள ஜமுனா டவர்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் வினய் குமார். இவரது மனைவி சிங்கம் சிரிஷா. இந்த நிலையில், சிரிஷா திடீரென்று உயிரிழந்தார். தனது மனைவி சிரிஷா மாரடைப்பால் இறந்துவிட்டதாக வினய் குமார் கூறியுள்ளார்.
இதையடுத்து, சிரிஷாவின் உடலை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்வதற்கு பதிலாக, ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஸ்ரீசைலம் அருகே அவர்களின் சொந்த கிராமத்திற்கு கொண்டு செல்ல வினய் குமார் ஏற்பாடு செய்தார். அதன்படி, அவசர அவசரமாக சிரிஷாவின் உடல் ஆம்புலன்ஸில் எடுத்துச் செல்லப்பட்டது. அவசரமாக வாகனம் புறப்பட்டிருந்ததை சிசிடிவி கேமரா காட்சிகள் கண்டறிந்து போலீஸுக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டது.
அதன்படி உடனடியாக விரைந்த போலீசார், ஆம்புலன்ஸை இடைமறித்து சோதனையிட்டு உடலை கைப்பற்றினர். முதற்கட்ட பரிசோதனையில், சிரிஷாவின் உடலில் காயங்கள் இருந்துள்ளது. இதில் சந்தேகமடைந்த போலீசார், அந்த உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வினய் குமார் கூறியதை ஏற்க மறுத்த சிரிஷாவின் பெற்றோர், வினய் மீது புகார் அளித்துள்ளனர்.
அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேதப் பரிசோதனை முடிவில் இந்த உயிரிழப்புக்கு உண்மையான காரணம் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.