Advertisment

“புதுச்சேரி தேர்தலை ஏன் தள்ளிவைக்க கூடாது” - நீதிபதி கேள்வி

Why the Puducherry election should not be postponed Judge asked

Advertisment

புதுச்சேரியில் பா.ஜ.க சார்பில் தொகுதி வாரியாக வாட்ஸ் ஆப் குரூப்கள் ஆரம்பித்து தேர்தல் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் மற்றும் முகவரி மட்டுமே இடம்பெற்றிருக்கும் என்பதால் ஆதார் ஆணையத்தில் இருந்து வாக்காளர்களின் மொபைல் எண்களைப் பெற்று பாஜக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதுகுறித்து சிறப்பு புலன் விசாரணை குழுவை நியமித்து விசாரிக்க உத்தரவிடக் கோரி புதுச்சேரி ஜனநாயக வாலிபர் சங்க தலைவர் ஏ.ஆனந்த் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு இன்று (27.03.2021) மீண்டும் தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, பல்க் எஸ்.எம்.எஸ். அனுப்புவதற்கு முன்னரே உரிய முன் அனுமதி பெற வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. ஆனால் பாஜக நிர்வாகி ஒருவர் பல்க் எஸ்.எம்.எஸ். அனுப்புவது குறித்து, புதுச்சேரி சைபர் கிரைம் பலமுறை தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர் அளித்த புகார் குறித்து சைபர் குற்றப் பிரிவு தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், வாக்களர்களுக்கு பல்க் எஸ்.எம்.எஸ். மூலம் பிரச்சாரம் செய்ய பாஜகவினர் தங்களிடம் அனுமதி கோரவில்லை எனவும், அனுமதி பெறாமல் அனுப்பியது குறித்து ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என விளக்கம் கேட்டு பாஜகவிற்கு மார்ச் 7 அன்றுநோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதற்கு இதுவரை பதிலளிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

Advertisment

மார்ச் 8இல் விண்ணப்பித்ததாக பாஜக தரப்பில் சொல்வது போல எந்த விண்ணப்பமும் பெறவில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டது. சைபர் கிரைம் விசாரித்து வருவதாகவும், அதன் அறிக்கையைப் பொறுத்து சின்னங்கள் சட்டத்தின்படி தலைமை தேர்தல் ஆணையர் நடவடிக்கை எடுப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் முழுமையான விசாரணை மேற்கொள்ளாமல் பாஜக மீது நடவடிக்கை எடுக்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டது. தேர்தலை நியாயமாக நடத்திவரும் நேர்மையான அமைப்பாக செயல்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதிகள், ‘அது தேர்தல் ஆணையத்தின் சுயச்சான்றுதானே தவிர நீதிமன்றம் ஏதும் கூறவில்லை’ என சுட்டிக்காட்டினர்.இதையடுத்து, புதுச்சேரி வாக்காளர்களின் மொபைல் எண்கள் பாஜகவினருக்கு எப்படி கிடைத்தது என விசாரிக்க ஆதார் ஆணையத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், பாஜகவினர் மீதான புகாரை விசாரித்து முடிக்கும் வரை புதுச்சேரியில் தேர்தலை ஏன் தள்ளிவைக்க கூடாது எனவும் தேர்தல் ஆணையத்திற்கு கேள்வி எழுப்பினர். பல்க் எஸ்.எம்.எஸ். அனுமதி கோரி பாஜக விண்ணப்பிக்கவில்லை, விசாரணை நேர்மையாக சென்றுகொண்டிருக்கிறது, விசாரணை நடைபெறும் நிலையில், தேர்தலைத் தள்ளிவைக்கும் பேச்சு தேவையற்றது எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

பின்னர் ஆதார் ஆணையம் மற்றும் தேர்தல் ஆணையம் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள், விசாரணை நியாயமான முறையில் நடப்பதை உறுதி செய்து விரைவில் விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 31ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

highcourt Pondicherry
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe