Advertisment

“சி.ஏ.ஜி., 40% கமிஷன்; மோடி மௌனம் காப்பது ஏன்” - காங்கிரஸ் எம்.பி. கேள்வி 

why modi was silent abou bjp's corruption

மணிப்பூர் மாநிலத்தில் பெரும்பான்மை சமூகமாக உள்ள மைத்தேயி சமூகத்தினர், தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.இதனால், பழங்குடியின மக்களான குக்கி மற்றும் நாகா மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த மே மாதம் 3ம் தேதி ஒருங்கிணைந்த பழங்குடியின மாணவர் அமைப்பு அந்த மாநிலத்தில் பேரணி நடத்தினர். இந்தப் பேரணியில் வன்முறை வெடித்தது. அதனைத் தொடர்ந்து இன்று வரை மணிப்பூர் மாநிலத்தில் அமைதி திரும்பவில்லை.

Advertisment

கடந்த மே 3ம் தேதி துவங்கி நடைபெற்று வரும் வன்முறையில் இதுவரை அங்கு 150க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 60,000க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை இழந்து முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக கலவரக்காரர்கள் அரசு ஆயுதக் கிடங்குகளில் இருந்து ஆயுதங்களைச் சூறையாடி சென்றுள்ளனர். இதனால், அங்கு கலவரம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. மணிப்பூர் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள், நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தைக் கொண்டு வந்தன. அதில் பேசிய பிரதமர் மோடி, “மணிப்பூர் குறித்து விரிவான விளக்கத்தை உள்துறை அமைச்சர் அமித்ஷா கொடுத்துவிட்டார். அங்கு அமைதியைக் கொண்டு வர ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தவறு செய்தவர்களை விடமாட்டோம். மணிப்பூரில் அமைதி திரும்பும் என உறுதி அளிக்கிறேன்'' என்றார்.

Advertisment

இந்நிலையில், நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய காங்கிரஸ் எம்.பி. கெளரவ் கோகோய், “பாதுகாப்பு படையினரிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் போன்றவை வன்முறையைக் கண்டு வரும் சாமானிய மக்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும். மணிப்பூரில் உள்ள மெய்த்தீஸ் மற்றும் குக்கி என இரு பிரிவினருக்கும் இடையே நல்லிணக்க பேச்சுவார்த்தை நடக்காத வரை அங்கு அமைதி திரும்பாது. கலவரம் தொடர்பாக முதல்வர் பிரேன் சிங் எடுத்த செயல்பாட்டில் இருபிரிவினரும் மகிழ்ச்சியடையவில்லை. நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தபோது உள்துறை அமைச்சர் மணிப்பூர் முதல்வரை முழுமையாக ஆதரித்துப் பேசினார். அது அந்த மாநில மக்களுக்கு துரதிர்ஷ்டவசமாக இருந்தது.

அமைதி குழுக்களில் முதல்வர் இருப்பது தான் அமைதி பேச்சுவார்த்தை தோல்விக்கு வழிவகுத்தது. நிவாரண முகாம்களில் இன்னும் 60,000 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு படையினரிடம் இருந்து கொள்ளையடித்த 6,000 ஆயுதங்களையும் மீட்கப்படும் வரை அந்த மாநிலத்தில் அமைதி இருக்காது. அதேபோல், முகாம்களில் இருப்பவர்களையும் மீட்க வேண்டும். ஆனால், அதைப் பற்றி பேசாமல் டெல்லி செங்கோட்டையில் இருந்துகொண்டு இந்தியாவை தவறான பாதையில் வழிநடத்துகிறார்.

பா.ஜ.க.வினர் செய்யும் ஊழல் விவகாரங்களில் மட்டும் பிரதமர் மோடி மெளனம் சாதிக்கிறார். கர்நாடகாவில் கடந்த பா.ஜ.க ஆட்சியில் நடந்த 40 சதவீதம்கமிஷன் ஊழல் குறித்து புகார் எழுந்தபோதும் மோடி அமைதியாக இருந்தார். சமீபத்தில் சி.ஏ.ஜி அறிக்கையில், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் உள்ள பல குறைபாடுகளை வெளியிட்டது. அதில், ஆயிரக்கணக்கான பயனாளிகள் எப்படி ஒரே மொபைல் எண்ணில் இணைக்கப்பட்டனர் என்று கேள்வி எழுப்பியது. அப்போதும் பிரதமர் மோடி அமைதியாக இருந்தார். அதனைத்தொடர்ந்து இன்னும் ஏராளமான புகார்கள் வந்த வண்ணம் இருந்தாலும் அதற்கும் மோடி அமைதியாகத்தான் இருக்கிறார்.

பா.ஜ.க.வுக்கு நேரு மற்றும் காந்தி குடும்பத்தினரை பிடிக்காத காரணத்தினால் நேரு அருங்காட்சியகத்திற்கு பெயர் மாற்றப்பட்டுள்ளது. பா.ஜ.க.வினர் நேரு முதல் காந்தி வரை அவர்களது குடும்பத்தினரை தொடர்ந்து அவமதித்து வருகின்றனர். ஆனால், மக்கள் ராகுல் காந்தி குடும்பத்தினரை விரும்புகின்றனர். பிரதமர் மோடி அதானி மற்றும் அம்பானி ஆகியோரை சந்திக்கிறார். ஆனால், ராகுல் காந்தி காய்கறி விற்பனையாளர்களை சந்திக்கிறார். இதுதான் பா.ஜ.க.வுக்கும், காங்கிரஸுக்கும் வித்தியாசம்.

எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி இந்திய நாட்டை ஒருங்கிணைக்க விரும்புகிறது. ஆனால், மத்தியில் ஆளும் பா.ஜ.க தலைமையிலான அரசு மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளது. வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள் சிறப்பாக செயல்படுவோம்” என்று கூறினார்.

modi manipur
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe