Skip to main content

“அமலாக்கத்துறை இயக்குநர் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுப்பார்கள்”- அமைச்சர் அமித்ஷா

Published on 12/07/2023 | Edited on 12/07/2023

 

"Whoever is the Director of Enforcement will take action" - Minister Amit Shah

 

அமலாக்கத்துறை இயக்குநரகத் தலைவர் சஞ்சய் குமார் மிஸ்ராவின் பதவிக்காலம் முடிந்த பின்னும் மத்திய அரசு அவருக்கு மூன்று முறை பதவி நீட்டிப்பு வழங்கியது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 3வது முறையாக சஞ்சய் குமார் மிஸ்ரா அமலாக்கத்துறை இயக்குநர் பதவியை ஏற்றார். இதனையடுத்து, மத்திய அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், சஞ்சய் குமார் மிஸ்ராவிற்கு மூன்றாவது முறையாக மத்திய அரசு பதவி நீட்டிப்பு செய்தது சட்டவிரோதமானது என்று உத்தரவிட்டது.

 

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “அமலாக்கத்துறை இயக்குநர் பதவி நீட்டிப்பு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை கண்டு சிலர் மகிழ்ச்சியடைந்துள்ளார்கள். ஆனால், மகிழ்ச்சியடைபவர்கள் பல்வேறு காரணங்களுக்காக ஏமாற்றம் அடைந்திருக்கிறார்கள். ஏனென்றால், அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ. இயக்குநர் பதவிக்காலத்தை இரண்டு ஆண்டில் இருந்து ஐந்து ஆண்டுகளாக மாற்றியமைத்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட திருத்தத்தை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

 

அதுமட்டுமல்லாமல், ஊழல் செய்பவர்கள் மற்றும் சட்டத்திற்கு புறம்பாக தவறு செய்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறையின் அதிகாரங்கள் ஒரே மாதிரியாகத் தான் இருக்கும். அமலாக்கத்துறை தவறு செய்பவர்களை விசாரணை செய்வதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறது. பணமோசடி மற்றும் அந்நிய செலாவணி சட்டங்களை மீறுதல் உள்ளிட்டவற்றில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. எனவே, அமலாக்கத்துறை இயக்குநர் யார் என்பது முக்கியம் அல்ல. ஏனென்றால், இந்த பதவியை யார் ஏற்றுக்கொண்டாலும், இந்தியாவின் வளர்ச்சிக்கு எதிரான மனநிலை கொண்டவர்களின் ஊழலைக் கவனித்து கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பார்கள்” என்று கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்