ADVERTISEMENT

குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசி; யாருக்கு முன்னுரிமை? - மத்திய அரசு நிபுணர் தகவல்!

06:44 PM Oct 04, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்தியாவில் தற்போதுவரை கோவிஷீல்ட், கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் மக்களுக்குப் பரவலாகச் செலுத்தப்படுகின்றன. ‘ஸ்புட்னிக் வி’ தடுப்பூசியின் வர்த்தக ரீதியிலான விநியோகம் இன்னும் தொடங்கப்படவில்லை. இத்தடுப்பூசிகளைத் தவிர மாடர்னா தடுப்பூசிக்கும் ஜான்சன் & ஜான்சனின் ஒற்றை டோஸ் தடுப்பூசிக்கும் இந்தியாவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல் அண்மையில் முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இரண்டாவது கரோனா தடுப்பூசியான ஸைடஸ் காடிலா நிறுவனத்தின் ‘ஸைகோவி - டி தடுப்பூசிக்கு இந்தியாவில் அனுமதி வழங்கப்பட்டது. ஸைடஸ் காடிலா நிறுவனத்தின் இந்த ஸைகோவி - டி தடுப்பூசி, மொத்தம் மூன்று டோஸ்களைக் கொண்டது. முதல் டோஸ் செலுத்தப்பட்ட 28வது நாளில் இரண்டாவது டோஸையும், 56வது நாளில் மூன்றாவது டோஸையும் செலுத்திக்கொள்ளலாம். அதேபோல் இது டி.என்.ஏ பிளாஸ்மிட்டைக் கொண்டு தயாரிக்கப்பட்ட உலகின் முதல் கரோனா தடுப்பூசியான இதனை 12 மற்றும் அதற்கும் மேற்பட்ட வயதுடையோரும் செலுத்திக்கொள்ளலாம்.

இந்தியாவில் 12 வயதிற்கு மேற்பட்டோருக்குச் செலுத்த அனுமதியளிக்கப்பட்ட ஒரே தடுப்பூசி இதுவாகும். இந்தநிலையில் இந்த தடுப்பூசியின் விலை 1900 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், அதேநேரத்தில் விலையைக் குறைப்பது குறித்து மத்திய அரசு ஸைடஸ் காடிலா நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த தடுப்பூசி விரைவில் 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையோருக்குப் பயன்பாட்டிற்கு வரும் எனவும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தநிலையில் 12 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும்போது யாருக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்பது குறித்து தேசிய நோய்த்தடுப்பு தொழில்நுட்ப ஆலோசனைக் குழு (NTAGI) தலைவர் டாக்டர் என்.கே அரோரா பதிலளித்துள்ளார். இத்தொடர்பாக அவர், கடுமையான இணை நோயுள்ள குழந்தைகளுக்கு முதலில் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் எனக் கூறியுள்ளார். அதேபோல் கரோனாவால் கடுமையாகப் பாதிக்கப்பட வாய்ப்பிருக்கும் குழந்தைகளுக்கும் தடுப்பூசி செலுத்துதலில் முன்னுரிமை அளிக்கப்படும் என என்.கே அரோரா கூறியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT