Skip to main content

குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு யார்?- விரிவான தகவல்! 

Published on 22/06/2022 | Edited on 22/06/2022

 

Who is the Presidential candidate Draupadi Murmu? - Detailed information!

 

குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பிரதமர் நரேந்திர மோடி, ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் உள்ளிட்டோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். 

 

குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு யார்? அவரது பின்னணி குறித்து விரிவாகப் பார்ப்போம்! 

 

கவுன்சிலராக அரசியல் பயணத்தைத் தொடங்கியவர் திரௌபதி முர்மு. சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர், ஆளுநர் என அடுத்தடுத்து பல வளர்ச்சிகளைக் கண்டவர். 1958- ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20- ஆம் தேதி அன்று ஒடிசா மாநிலத்தில் பிறந்த திரௌபதி முர்மு, சந்தல் என்ற பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். புவனேஸ்வரில் பட்டம் பயின்ற இவர், ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர், அரசியலில் ஆர்வம் ஏற்பட்டு, பா.ஜ.க.வில் இணைந்து கடந்த 1997- ஆம் ஆண்டு நடைபெற்ற கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

 

அதைத் தொடர்ந்து, கடந்த 2002- ஆம் ஆண்டு ராய்ரங்க்ப்பூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒடிஷாவில் பிஜு ஜனதா தளம் மற்றும் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைந்திருந்த போது, இரண்டு ஆண்டுகள் போக்குவரத்துத்துறை அமைச்சராகவும், அதன் பிறகு இரண்டு ஆண்டுகளுக்கு மீன்வளத்துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.  

 

2007- ஆம் ஆண்டு ஒடிசா மாநிலத்தின் சிறந்த சட்டமன்ற உறுப்பினருக்கான விருதையும் இவர் பெற்றுள்ளார். பா.ஜ.க.வில் தேசிய பழங்குடியின அமைப்பின் துணைத் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். கடந்த 2015- ஆம் ஆண்டு ஜார்கண்ட் மாநிலத்தின் முதல் பெண் ஆளுநராக இவர் நியமிக்கப்பட்டார். இந்தியாவிலேயே பழங்குடியினத்தைச் சேர்ந்த முதல் பெண் ஆளுநர் என்ற பெருமையையும் அப்போது பெற்றார்.

 

அரசியலில் அடுத்தடுத்து மிக முக்கிய இடங்களை அவர் பெற்றிருந்தாலும், தனிப்பட்ட வாழ்க்கையில் பெரும் இழப்புகளைச் சந்தித்துள்ளார். இவரது கணவர் மற்றும் இரண்டு மகன்கள் அடுத்தடுத்து உயிரிழந்தது இவரது வாழ்வில் நடைபெற்ற பெரிய சோகம். இருப்பினும், தன்னம்பிக்கை தளராமல் மக்கள் பணியாற்றிய இவர், தற்போது குடியரசுத்தலைவர் வேட்பாளராக உயர்ந்திருக்கிறார். 


தேர்தலில் வெற்றி பெறும் பட்சத்தில் இந்தியாவின் முதல் பழங்குடியின குடியரசுத்தலைவர் என்ற பெருமையைப் பெற உள்ளார். 


சார்ந்த செய்திகள்

Next Story

குடியரசுத் தலைவர் தேர்தல்- திரௌபதி முர்மு தொடர்ந்து முன்னிலை! 

Published on 21/07/2022 | Edited on 21/07/2022

 

Presidential election- Draupadi Murmu continues to lead!

 

இந்தியாவின் தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் ஜூலை 24- ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனால் நாட்டின் 16- வது குடியரசுத் தலைவரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று முன்தினம் (18/07/2022) நடைபெற்றது. 

 

இதில், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்மு, தி.மு.க., காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் களம் கண்டுள்ளனர். 

 

இந்த நிலையில், பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக, குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்கு எண்ணிக்கையில் இரண்டாம் சுற்று நிறைவில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர் திரௌபதி முர்மு தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார். இரண்டாம் சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில் திரௌபதி முர்மு 4,83,299  மதிப்பு வாக்குகளைப் பெற்று முன்னிலையில் உள்ளார். எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா, இரண்டாம் சுற்றின் முடிவில் 1,89,876  மதிப்பு வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார். சுமார் 2,93,423 மதிப்பு வாக்குகள் வித்தியாசத்தில் திரௌபதி முர்மு தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். 

 

திரௌபதி முர்மு 1,349 வாக்குகளையும், யஷ்வந்த் சின்ஹா 537 வாக்குகளையும் பெற்றுள்ளனர். 

 

வாக்கு வித்தியாசம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், நாடு முழுவதும் உள்ள பா.ஜ.க. தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். 

 

Next Story

விமானத்தில் வாக்குப்பெட்டிக்கு தனியாகப் பயணச்சீட்டு! 

Published on 20/07/2022 | Edited on 20/07/2022

 

A separate ticket for the ballot box in the plane!

 

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகள் மிஸ்டர்.பேலட் பாக்ஸ் என்ற பெயரில் பயணச்சீட்டு பெறப்பட்டு, விமானத்தில் கொண்டு செல்லப்பட்டது தற்போது தெரிய வந்ததுள்ளது.

 

இந்தியாவின் தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் ஜூலை 24- ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனால் நாட்டின் 15- வது குடியரசுத் தலைவரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று நடைபெற்றது.

 

இதில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநர் திரவுபதி முர்மு, தி.மு.க., காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் களம் கண்டனர்.

 

இதன்படி நேற்று முன்தினம் (18/07/2022) நாடு முழுவதும் உள்ள மாநில சட்டப்பேரவைகள் மற்றும் நாடாளுமன்றத்தில் வாக்குப்பதிவு நடைபெற்றது. குடியரசுத் தலைவர் தேர்தலில் நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் பதிவான வாக்குகள் நாளை (21/07/2022) டெல்லியில் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது. இதற்காக வாக்குப் பெட்டிகள் அனைத்தும் அந்தந்த மாநிலங்களில் இருந்து பலத்த பாதுகாப்புடன் விமானத்தில் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டன.

 

இந்த முறை விஐபிகளுக்கு வழங்கப்படும் பாதுகாப்புக்கு இணையாக சொகுசு இருக்கையில் இந்த வாக்குப் பெட்டிகள் டெல்லி கொண்டு செல்லப்பட்டது. அதாவது 'மிஸ்டர். பேலட் பாக்ஸ்' என்ற பெயரில் ஒரு விஐபி எப்படி டெல்லி சென்றால், அரசு எப்படி அவருக்கு பாதுகாப்பு அளிக்குமோ அந்த வகையில் இந்த ஏற்பாடுகள் இருந்தது.

 

'மிஸ்டர் பேலட் பாக்ஸ்' சீல் வைக்கப்பட்டு மாநில காவல்துறை பாதுகாப்புடன் விமான நிலையங்களுக்கு கொண்டு வரப்பட்டது. விமான நிலையங்களில் சோதனை முடிந்த பிறகு தனி வாகனத்தில் 'மிஸ்டர் பேலட் பாக்ஸ்' விமானத்திற்கு உள்ளே கொண்டு செல்லப்பட்டது.

 

அப்போது விமானங்களில் வாக்குப்பெட்டிகளை வைக்க தனி பயணச்சீட்டு பெறப்பட்டதும், அதில் மிஸ்டர்.பேலட் பாக்ஸ் என்று குறிப்பிடப்பட்டிருந்ததும் தெரிய வந்திருக்கிறது. அந்த பெட்டியுடன் தேர்தல் நடத்தும் அதிகாரியும் டெல்லி சென்று அந்த வாக்குப்பெட்டியை ஒப்படைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.