Advertisment

எதிர்க்கட்சிகளின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் யார்? - வெளியான புதிய தகவல்

rashtrapati bhavan

Advertisment

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் விரைவில் முடிவடையவிருக்கும் நிலையில், அதற்கான தேர்தல் ஜூலை 18ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில், பா.ஜ.க. சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படவுள்ள நிலையில், எதிர்க்கட்சித் தரப்பில் பொதுவான வேட்பாளரை நிறுத்த எதிர்க்கட்சிகள் முடிவெடுத்துள்ளன. அதற்கான முன்னெடுப்பை எடுத்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கடந்த 15ஆம் தேதி டெல்லியில் ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தினார். அந்தக் கூட்டத்தில் சரத் பவரை பொது வேட்பாளராக்க அனைத்து கட்சிகளும் விருப்பம் தெரிவித்த நிலையில், அவர் மறுத்துவிட்டார். அதனைத் தொடர்ந்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட காஷ்மீரின் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா மற்றும் காந்தியின் பேரன் கோபால கிருஷ்ண காந்தியும் போட்டியிட மறுப்பு தெரிவித்துவிட, எதிர்க்கட்சி வேட்பாளர் தேர்வில் இழுபறி நீடித்துவருகிறது.

இந்த நிலையில், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் யஷ்வந்த் சின்ஹா கட்சியிலிருந்து விலகியுள்ளார். இது குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள யஷ்வந்த் சின்ஹா, திரிணாமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாகவும் அதைவிட பெரிய தேசப்பணிக்காகவும் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்காகவும் செயல்படுவதற்கான நேரம் வந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் வேட்பாளர் தேர்வு தொடர்பாக இன்று மதியம் சரத் பவார் தலைமையில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், யஷ்வந்த் சின்ஹாவின் ராஜினாமா முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. இந்தக் கூட்டத்திலோ அல்லது அதன் பிறகோ எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe