Skip to main content

எதிர்க்கட்சிகளின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் யார்? - வெளியான புதிய தகவல்

Published on 21/06/2022 | Edited on 21/06/2022

 

rashtrapati bhavan

 

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் விரைவில் முடிவடையவிருக்கும் நிலையில், அதற்கான தேர்தல் ஜூலை 18ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில், பா.ஜ.க. சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படவுள்ள நிலையில், எதிர்க்கட்சித் தரப்பில் பொதுவான வேட்பாளரை நிறுத்த எதிர்க்கட்சிகள் முடிவெடுத்துள்ளன. அதற்கான முன்னெடுப்பை எடுத்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கடந்த 15ஆம் தேதி டெல்லியில் ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தினார். அந்தக் கூட்டத்தில் சரத் பவரை பொது வேட்பாளராக்க அனைத்து கட்சிகளும் விருப்பம் தெரிவித்த நிலையில், அவர் மறுத்துவிட்டார். அதனைத் தொடர்ந்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட காஷ்மீரின் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா மற்றும் காந்தியின் பேரன் கோபால கிருஷ்ண காந்தியும் போட்டியிட மறுப்பு தெரிவித்துவிட, எதிர்க்கட்சி வேட்பாளர் தேர்வில் இழுபறி நீடித்துவருகிறது.

 

இந்த நிலையில், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் யஷ்வந்த் சின்ஹா கட்சியிலிருந்து விலகியுள்ளார். இது குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள யஷ்வந்த் சின்ஹா, திரிணாமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாகவும் அதைவிட பெரிய தேசப்பணிக்காகவும் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்காகவும் செயல்படுவதற்கான நேரம் வந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

 

குடியரசுத் தலைவர் வேட்பாளர் தேர்வு தொடர்பாக இன்று மதியம் சரத் பவார் தலைமையில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், யஷ்வந்த் சின்ஹாவின் ராஜினாமா முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. இந்தக் கூட்டத்திலோ அல்லது அதன் பிறகோ எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

  
 

சார்ந்த செய்திகள்

Next Story

அண்ணா அறிவாலயத்தில் யஷ்வந்த் சின்ஹா!

Published on 30/06/2022 | Edited on 30/06/2022

 

Yashwant Sinha at Anna Arivalayam

 

தி.மு.க., காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் சார்பில் குடியரசுத் தலைவரின் தேர்தலுக்காக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள யஷ்வந்த் சின்ஹா, திமுக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு கோரி இன்று காலை தமிழகம் வந்தார்.

 

அதைத் தொடர்ந்து, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தி.மு.க.வின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் வந்த அவருக்கு தி.மு.க தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். மேலும், அறிவாலயத்தில் நடைபெறும் விழாவில்  யஷ்வந்த் சின்ஹா, தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள்,  மற்றும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்டோரை நேரில் சந்தித்து குடியரசுத் தேர்தலில் தனக்கு ஆதரவாக வாக்களிக்கும்படி கேட்டுக் கொள்ள இருக்கிறார். 

 

 

Next Story

சென்னை வந்தார் யஷ்வந்த் சின்ஹா! 

Published on 30/06/2022 | Edited on 30/06/2022

 

Yashwant Sinha arrives in Chennai!

 

தி.மு.க., காங்கிரஸ்,திரிணாமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் சார்பில் குடியரசுத் தலைவரின் தேர்தலுக்காக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள யஷ்வந்த் சின்ஹா, டெல்லியில் இருந்து விமானம் மூலம் இன்று (30/06/2022) காலை சென்னை விமான நிலையத்திற்கு வந்தார். 

 

அதைத் தொடர்ந்து, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தி.மு.க.வின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று (30/06/2022) மாலை 05.00 மணிக்கு கலைஞர் அரங்கில் தி.மு.க.வின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து பூங்கொத்து மற்றும் பொன்னாடைப் போர்த்தி ஆதரவு கோரும் யஷ்வந்த் சின்ஹா, தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோரை நேரில் சந்தித்து குடியரசுத் தேர்தலில் தனக்கு ஆதரவாக வாக்களிக்கும்படி கேட்டுக் கொள்கிறார். 

 

பின்னர், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் மற்றும் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்து ஆதரவு கோருகிறார்.