
தமிழ்நாடு மற்றும் அசாம் மாநிலத்தை சேர்ந்த 8 பேரின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் முடியவுள்ள நிலையில் வரும் 19ஆம் தேதி தமிழ்நாட்டில் மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
தற்பொழுது மதிமுகவின் வைகோ, திமுகவின் வில்சன், பாமகவின் அன்புமணி ராமதாஸ், எம்.சண்முகம், சந்திரசேகரன், முகமது அப்துல்லா உள்ளிட்ட 6 பேரின் மாநிலங்களவை உறுப்பினர் பதவி காலம் வரும் 24/7/2025 அன்றுடன் முடிய இருக்கிறது. இதனால் காலியாகும் இடங்களுக்கு தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்திய தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி ஜூன் 19ஆம் தேதி தமிழ்நாட்டில் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் நடைபெறும். தேர்தலுக்கான அறிவிப்பு ஜூன் இரண்டாம் தேதி வெளியாகும். நாமினேஷன் செய்வதற்கு ஜூன் 9ஆம் தேதி கடைசி நாள். ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் நாமினேஷனை திரும்பப்பெற ஜூன் 12-ம் தேதி கடைசி நாள் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திமுகவை பொறுத்தவரை நான்கு எம்பிக்கள் கிடைப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதேநேரம் அதிமுக கூட்டணிக்கு இரண்டு மாநிலங்களவை உறுப்பினர்கள் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. தற்பொழுது திமுக கூட்டணியில் உள்ள மதிமுகவின் பொதுச்செயலாளர் வைகோ மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேபோல் அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக ஏற்கனவே மாநிலங்களவை எம்பி பதவியை அதிமுக தங்களுக்கு கொடுக்க இருப்பதாக பிரேமலாதா விஜயகாந்த் தெரிவித்து இருந்தார். ஆனால் எடப்பாடி பழனிசாமி அதுகுறித்து எந்த பதிலும் அளிக்காததால் தற்பொழுது அதுவும் கேள்விக்குறியாகவே உள்ளது. ஒருவேளை எடப்பாடி பழனிசாமி தேமுதிகவை டிக் அடித்தால் விஜயபிரபாகரன் எம்.பியாக வாய்ப்புள்ளது. அதேபோல் நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திமுக, அதிமுக உள்ளிட்ட இரண்டு கட்சிகளும் யார் யாருக்கு வாய்ப்புகளை வழங்கும் என்ற கேள்விகள் தற்போதே சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.