குடியரசுத் துணைத் தலைவராக இருந்த ஜக்தீப் தன்கர் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி நேற்று முன்தினம் (21.07.2025) தனது பதவியை திடீரென ராஜினாமா செய்திருந்தார். இந்த தகவல்  நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. ஜக்தீப் தன்கர் இது தொடர்பான கடிதத்தை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு அனுப்பியிருந்தார். அந்த கடிதத்தில் மருத்துவ காரணங்களுக்காக குடியரசுத் துணை தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக அவர் தெரிவித்திருந்தார். இருப்பினும், பா.ஜ.க தலைவர்கள் - ஜக்தீப் தன்கர் இடையே ஏற்பட்ட கருத்து மோதலால் தான் அவர் ராஜினாமா செய்துள்ளார் என்று எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர்.

இத்தகைய பரபரப்பான சூழலில் தான் மாநிலங்களவையின் துணைத் தலைவரான ஹரிவன்ஷ் நாராயணன் சிங், மாநிலங்களவையை வழிநடத்தினார். அதோடு ஜக்தீப் தன்கர் ராஜினாமா செய்தது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பி இரு அவைகளிலுமே எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். இதனால், மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளுமே ஒத்திவைக்கப்பட்டன. இதற்கிடையே, ஜக்தீப் தன்கரின் ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டுள்ளது. அதன்படி ஜக்தீப் தன்கரின் ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு முறைப்படி ஏற்று அந்த கடிதத்தை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பியிருந்தார்.

இந்நிலையில் குடியரசு துணைத்தலைவர் பதவிக்கு விரைவில் தேர்தல் நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்ட்டபிரிவு 63இன் படி குடியரசு துணைத்தலைவர் ஒருவர் பதவியில் இருக்கும் போது இறந்தாலோ, ராஜினாமா செய்தாலோ, பதவியில் இருந்து நீக்கப்பட்டாலோ அந்த காலியிடத்திற்கான தேர்தல் 60 நாட்களுக்குள் நடைபெற வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாகக் குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடத்துவதற்கான நடைமுறைகளை இந்தியத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருவதாகத் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி வரும் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் அதாவது நடப்பு மழைக்கால கூட்டத்தொடரின் போதே நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பதற்கு ஏதுவாக இந்த தேர்தல் நடைபெறும் என்ற தகவலையும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மக்களவை மற்றும் மாநிலங்களவையைச் சேர்ந்த இரு அவைகளின் எம்.பி.க்கள் குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தல் வாக்களிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.