வாட்ஸ் ஆப் போன்று போலியாக அங்கீகராமற்று இருக்கும் செயலிகளை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தினால் வாடிக்கையாளர்களின் கணக்கு தடை செய்யப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. வாட்ஸ்-ஆப் நிறுவனத்தின் செயலியைப் போன்றே பல போலி செயலிகள் கூகுள் ப்ளே-ஸ்டோரில் இருக்கிறது.

Advertisment

whatsapp

ஹேக்கர்கள், வாட்ஸ் ஆப் போன்று போலியான செயலியை உருவாக்கி அதனை கூகுளின் ப்ளே-ஸ்டோரில் வெளியிட்டுள்ளனர். அவர்கள் வெளியிடப்பட்டுள்ள அந்த செயலிகளை பயன்படுத்துவோரின் தகவல்களை அவர்களுக்கு தெரியாமலே அந்த ஹேக்கர்கள் அதனை திருடிவருகின்றனர்.

Advertisment

அதேசமயம் சிலர் வாட்ஸ்-ஆப் கட்டுப்பாடுகளை மீறுவதற்கும், பிறரை ஏமாற்றுவதற்கும் இதுபோன்ற போலி செயலிகளை பயன்படுத்துகின்றனர். எடுத்துக்காட்டாக, கடைசியாக வாட்ஸ்-ஆப்பை பார்த்த நேரம் எனக் குறிப்பிட்ட நேரத்தை பதிவு செய்துவிட்டு, அவர்கள் எப்போது பயன்படுத்தினாலும் அவர்கள் குறித்து வைத்த நேரமே அவர்கள் கடைசியாக வாட்ஸ் ஆப் பார்த்த நேரமாக காட்டும் வசதியும் இது போன்ற போலி வாட்ஸ் ஆப் செயலிகளில் உள்ளது.

இதுபோன்ற சில வசதிகளுக்காக சிலர் இந்த போலி வாட்ஸ்-ஆப் செயலிகளில் கணக்குத்தொடங்கி பயன்படுத்துகின்றனர். ஆனால் இதுபோல் போலி வாட்ஸ் ஆப்களை பயன்படுத்துவதனால் அவர்களின் தகவல்கள் ஒரு பக்கம் திருடப்பட்டுக்கொண்டிருக்கிறது என்பது அவர்களுக்கே தெரிவதில்லை.

Advertisment

இவற்றுக்கெல்லாம் தீர்வு காணும் வகையில் வாட்ஸ்-ஆப் நிறுவனம் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, வாட்ஸ்-ஆப் ப்ளஸ் (WhatsApp Plus) மற்றும் ஜிபி வாட்ஸ்-ஆப் (GB WhatsApp) ஆகிய செயலிகளை பயன்படுத்தும் வாட்ஸ்-ஆப் பயன்பட்டாளர்களின் கணக்கு முடக்கப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த இரண்டு செயலிகளும் தங்களின் அதிகாரப்பூர்வ செயலிகள் இல்லை என்றும், இந்தச் செயலிகள் மூலம் பரிமாற்றம் செய்யப்படும் தகவல்களின் பாதுகாப்பிற்கு வாட்ஸ் ஆப் நிறுவனம் பொறுப்பில்லை என்றும் தெரிவித்துள்ளது.

இந்த செயலிகளை பயன்படுத்து வாடிக்கையாளர்கள், உடனே அங்கீகரிக்கப்பட்ட வாட்ஸ்-ஆப் செயலிக்கு தங்கள் தகவல்களை மாற்றிக்கொண்டு அதை மட்டும் பயன்படுத்துமாறும் அந்நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

தொடர்ந்து அங்கீகரிக்கப்படாத அந்தச் செயலிகளை பயன்படுத்துவோரின் வாட்ஸ்-ஆப் கணக்குகள் நிரந்தரமாக முடக்கப்படும் எனவும் வாட்ஸ் ஆப் நிறுவனம் எச்சரித்துள்ளது. மேலும், அந்தச் செயலிகளை பயன்படுத்துவோரின் கணக்குகள் தற்காலிகமாக முடக்கியுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.