'தமிழில் இருந்து கன்னடம் பிறந்ததற்கு என்ன ஆதாரம்? ஒரு மன்னிப்பு கேட்டால் என்ன?'-கேள்விகளை அடுக்கிய நீதிமன்றம்

'What is the proof that Kannada was born from Tamil? What if I apologize?' - Karnataka court questions

மணிரத்னம் இயக்கத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘தக் லைஃப்’ படத்தில் நடித்துள்ளார் கமல்ஹாசன். கமலின் ராஜ்கமல் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை கமலுடன் இணைந்து ரெட் ஜெயண்ட் நிறுவனம் வழங்குகிறது. படம் வருகிற ஜூன் 5ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் சமீபத்தில் நடந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று பேசிய கமலின் கருத்துக்கு கர்நாடகாவில் பலத்த எதிர்ப்பு எழுந்தது. அம்மாநில முதலமைச்சர் முதல் எதிர் கட்சி தொடங்கி பல்வேறு கன்னட அமைப்புகள் போர்க்கொடி தூக்கின.

மேலும் கமல் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் அவரது படங்கள் கர்நாடகாவில் வெளியாகாது என்றும் எச்சரிக்கைகள் விடுத்தன. ஆனால் கமல் 'அன்பும் மன்னிப்பு கேட்காது' என அவரது பாணியில் திட்டவட்டமாக மன்னிப்பு கேட்க முடியாது என சொல்லிவிட்டார். இருந்தாலும் அங்கு எதிர்ப்புக் குரல்கள் ஓய்ந்தபாடில்லை. கமலுக்கு எதிராகப் போராட்டங்கள் நடத்தப்பட்டு உருவபொம்மையும் எரிக்கப்பட்டது.

கர்நாடக திரைப்பட வர்த்தக சபை, கன்னட அமைப்புகள் கூறிய எச்சரிக்கையை வலியுறுத்தியது. இதனால் தக் லைஃப் படம் கர்நாடாகவில் வெளியாவதில் சிக்கல் நீடித்து வருகிறது. இதனிடையே படத்தை எந்த தடையும் இல்லாமல் திரையிடவும் பார்வையாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட வேண்டும் என கமல் தரப்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி நாக பிரசன்னா கமல் தரப்பிற்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளார். அதில், 'கன்னட மொழி தமிழ் மொழியில் இருந்து பிறந்தது என்று கூற நீங்கள் என்ன மொழியில் ஆய்வாளரா? கன்னட மொழி குறித்துப் பேசி கமல்ஹாசன் கர்நாடகாவில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளார். கமல்ஹாசனின் மொழி குறித்து இந்த பேச்சு கன்னட மக்களின் உணர்வை புண்படுத்தியுள்ளது.

எந்த ஒரு மொழியும்மற்றொருமொழியில் இருந்து பிறந்தது இல்லை. ஒரு மன்னிப்பு கேட்டால் என்ன? கமல்ஹாசன் தன்னுடைய பேச்சால் கன்னடம் பேசும் மக்களின் மொழி உணர்வை சிறுமைப்படுத்திவிட்டு தற்பொழுது வணிக நோக்கத்திற்காக நீதிமன்றத்தை நாடி இருக்கிறார். மன்னிப்பு கேட்பதே இந்த பிரச்சனைக்கு தீர்வாக இருக்கும். கன்னடம் தமிழில் இருந்து பிறந்ததற்கு என்ன ஆதாரம்?' எனபல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.

அதேபோல் கமல் தரப்பில் வைக்கப்பட்ட வாதத்தில் 'சூழலை சுமூகமாக்கவே விரும்புகிறோம். நிலைமை கைமீறி விட்டது. தக் லைஃப் படத்திற்கு தடை விதிப்பது என்பது மக்களின் சினிமா பார்க்கும் உரிமையை மீறும் செயல்'என தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து வழக்கானது பிற்பகல் 2:30 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

kamalhaasan karnataka Language Tamil language Thug Life
இதையும் படியுங்கள்
Subscribe