Advertisment

கொல்கத்தா மருத்துவமனை முன்னாள் முதல்வர் கைது; சிபிஐ அதிரடி நடவடிக்கை!

west bengal government doctor arrested

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் அரசு மருத்துவமனையில் முதுகலை இரண்டாம் ஆண்டு பயிலும் பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் கடந்த 9ஆம் தேதி (09.08.2024) பணியில் இருந்த போது பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார். அதே சமயம் மருத்துவ மாணவியின் கொலை சம்பவத்தைக் கண்டித்தும், கொலை செய்யப்பட்ட மாணவிக்கு நீதி கேட்டும் நாடு முழுவதும் மருத்துவ மாணவர்களின் போராட்டம் நடத்தினர்.

Advertisment

இதன் காரணமாக அரசு மருத்துவமனையில் மருத்துவ சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. அந்தவகையில் அவசர சிகிச்சைப் பிரிவு மற்றும் புறநோயாளிகள் சிகிச்சைப் பிரிவில் மருத்துவ சேவைகள் வெகுவாக பாதிக்கப்பட்டன. இதனிடையே கொல்கத்தா உயர்நீதிமன்றம் கொலை வழக்கை சி.பி.ஐக்கு மாற்றி உத்தரவிட்டது. இந்த சூழலில் உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து பெண் மருத்துவர் கொலைத் தொடர்பாக வழக்குப் பதிவு செய்தது. இதையடுத்து, பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட மருத்துவமனையின் முதல்வராக இருந்த சந்தீப் கோஷ் தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆனால், சில மணி நேரத்திலேயே அவர் மற்றொரு மருத்துவமனைக்கு முதல்வராக மாநில அரசு அறிவித்திருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Advertisment

இதையடுத்து, சந்தீப் கோஷை வேறு மருத்துவமனைக்கு மாற்றுவதற்கு பதில் அவரை நீண்ட நாள் விடுமுறையில் இருக்கும்படி நீதிமன்றம் அறிவுறுத்தியதை அடுத்து சந்தீப் கோஷை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து இந்திய மருத்துவ சங்கம் சஸ்பெண்ட் செய்தது. அதே சமயத்தில், பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக சிபிஐ, சந்தீப் கோஷ் உள்பட பலரிடம் விசாரணை நடத்தி வந்தது. இந்த விசாரணையின் போது, மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள், மருந்து பொருட்கள் வாங்குவதில் மருத்துவமனை முதல்வராக இருந்த போது சந்தீப் கோஷ் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. அதன் அடிப்படையில், சந்தீப் கோஷின் வீட்டின் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். அந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

இந்த நிலையில், மருத்துவமனை முதல்வராக இருந்த போது நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் சந்தீப் கோஷை நேற்று இரவு சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தீப் கோஷிடம் சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

CBI Doctor
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe