ADVERTISEMENT

மம்தாவுக்கு ஒரு நாள் 'தடை'! - அதிர்ச்சியில் திரிணாமூல் காங்கிரஸார்!

08:07 PM Apr 12, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம் ஆகிய மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், மேற்கு வங்க மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 17 ஆம் தேதி நடைபெறுகிறது. 45 சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கும், பா.ஜ.க.வுக்கும், காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. மேலும், தேர்தல் பிரச்சாரத்தின் போது திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள், பா.ஜ.க.மீதும், பா.ஜ.க. தலைவர்கள் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.

இதனால், இரு கட்சிகளின் நிர்வாகிகளிடையே மோதல் சம்பவங்களும் நிகழ்ந்துள்ளது. குறிப்பாக, நான்காம் கட்ட வாக்குப்பதிவின் போது திரிணாமூல் காங்கிரஸ் கட்சி மற்றும் பா.ஜ.க.வினரிடையே மோதல் ஏற்பட்டது. அப்போது, மோதலைக் கட்டுப்படுத்த தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் 5 பேர் உயிரிழந்தனர்.

இந்த நிலையில், தேர்தல் பிரச்சாரத்தின் போது சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக மேற்கு வங்க மாநில முதல்வரும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி மீது பா.ஜ.க. சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்தப் புகார் மனுவை பரிசீலித்த இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம், மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி ஒரு நாள் தேர்தல் பிரச்சாரம் செய்யத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவில், 'மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி இன்று (12/04/2021) இரவு 08.00 மணி முதல் நாளை (13/04/2021) இரவு 08.00 மணி வரை தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் எட்டாம் கட்ட மற்றும் இறுதிக் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 29- ஆம் தேதி நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து, தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களில் பதிவான வாக்குகள் மே 2- ஆம் தேதி அன்று எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT