
10வது ஆண்டாக இந்த ஆண்டு டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்று (24.05.2025) இந்த கூட்டம் நடைபெற்றுது. அதில் ‘2047இல் வளர்ச்சியடைந்த பாரதம்’ என்ற தலைப்பில், தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம், மரபுசாரா எரிசக்தி உருவாக்கம் போன்றவை குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிதி குறித்து அவர் வலியுறுத்தி பேசியிருந்தார். இந்த கூட்டத்தில் ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு, இமாச்சல் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு, மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ், சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தியோ சாய், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டம் நடைபெறும் மண்டபத்தில் பிரதமர் மோடியுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு மேற்கொண்டார். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோரோடு கேஷுவலாக தேநீர் அருந்தியபடி மோடி இருவரிடமும் பேசினார். இது தொடர்பான காட்சிகள் வெளியாகி இருந்தது.

நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்று முடிந்த நிலையில் டெல்லி விமான நிலையத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ''நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு என்னென்ன செய்யணும் என்ன பாக்கி இருக்கிறது என்று ஒரு பட்டியல் போட்டு கூட்டத்தில் பேசியிருக்கிறேன். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் பள்ளிக்கல்வித்துறைக்கான தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய நிதி; கோவை மற்றும் மதுரைக்கான மெட்ரோ திட்டங்கள்; அங்குள்ள விமான நிலையங்களை மேம்படுத்துவது; சென்னையில் பறக்கும் ரயில் திட்டத்தை மெட்ரோவிடம் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறோம்.
செங்கல்பட்டு-திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலை 8 வழி சாலையாக மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்படும் இந்திய மீனவர்களையும் அவர்களது படகுகளை மீட்பது ஆகிய கோரிக்கைகள் எல்லாம் வலியுறுத்தி இருக்கிறேன்.
கூட்டம் முடிந்த பிறகு பிரதமரை சந்திக்க நேரம் கேட்டிருந்தேன். அங்கு ஒரு ஐந்து நிமிடம் சந்திக்க வாய்ப்பு கொடுத்தார்கள். அந்த வாய்ப்பை பயன்படுத்தி இந்த கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தி வந்தேன்'' என்றார்.
அப்போது செய்தியாளர் ஒருவர் 'மோடி என்ன சொன்னார்?' என்ற கேள்விக்கு சிரித்தபடியே 'என்ன சொல்வார் செய்ய மாட்டேன் என்றா சொல்வார். செய்வேன் என்று தான் சொல்வார். செய்வாரா செய்யவில்லை என்பது போகப் போகத்தான் தெரியும்'' என்றார்.