Wedding day celebration in the road.. one passes away

புதுச்சேரி வில்லியனூர் அருகே உள்ள மூர்த்தி நகர், முதல் தெருவில் குடியிருக்கும் சங்கர் - ரமணி தம்பதிக்கு நேற்று முன்தினம் திருமண நாள். இவர்களின் திருமண நாளை முன்னிட்டு ரமணியின் தம்பி அம்மா நகரைச் சேர்ந்த ராஜா, தனது நண்பர்களுடன் மூர்த்தி நகருக்குச் சென்று இரவு 9.30 மணியளவில் தனது சகோதரியின் திருமண நாளை வீட்டின் எதிரே சாலையில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இதில் இளைஞர்கள் மது போதையில் இருந்துள்ளனர்.

Advertisment

இதனை எதிர்வீட்டைச் சேர்ந்த சங்கர் என்பவரின் மகன் சதீஷ் (எ) மணிகண்டன்(26), அவரது நண்பர்கள் சபரி, ஹரி, ராஜவேல் ஆகியோர் 'சாலையோரமாக கொண்டாட வேண்டியது தானே..' என ரமணி - சங்கர் மற்றும் அவரது நண்பர்களிம் கேட்டனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அருகே இருந்தவர்கள் இரு தரப்பையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். ரமணியின் தம்பி ராஜா, அவரது நண்பர்கள் அங்கிருந்து சென்றனர். இந்நிலையில் அன்று இரவு 10.45 மணியளவில் ராஜா மற்றும் அவரது நண்பர்கள் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் மூர்த்தி நகருக்குச் சென்று, தனது வீட்டின் எதிரே மொபைல் போனில் பேசிக் கொண்டிருந்த மணிகண்டனைச் சரமாரியாகத் தாக்கி, கழுத்து மற்றும் வயிற்றுப் பகுதிகளில் கத்தியால் குத்தி விட்டு தப்பித்துச் சென்றனர்.

Advertisment

ரத்த வெள்ளத்தில் சரிந்த மணிகண்டனை அப்பகுதியினர் மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த மணிகண்டன் நள்ளிரவு 12 மணியளவில் உயரிழந்தார். மணிகண்டனுக்கு கடந்த ஆண்டுதான் திருமணம் நடந்தது. அவரது மனைவி 4 மாத கர்ப்பமாக உள்ளார்.

இதனிடையே மணிகண்டன் கொலை தொடர்பாக 5 பேர் மீது வில்லியனூர் போலீசார் வழக்கு பதிந்து கொலை வழக்கில் தொடர்புடைய அம்மாநகர் ராஜா, கண்டமங்கலம் அசார், கணுவாப்பேட்டை புதுநகர் தமிழ்ச்செல்வன், மூர்த்தி நகர் சங்கர், அவரது மனைவி ரமணி உள்ளிட்ட 5 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

Wedding day celebration in the road.. one passes away

இந்த நிலையில் பிரேத பரிசோதனை முடிந்து நேற்று பகல் 2 மணி அளவில் ஆம்புலன்ஸில் கொண்டு வரப்பட்ட மணிகண்டனின் உடலை உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் வாங்க மறுத்தனர். கொலை குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கொல்லப்பட்ட மணிகண்டன் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி வில்லியனூர் - பத்துக்கண்ணு சாலை மூர்த்தி நகரில் மறியலில் ஈடுபட்டனர்.

போராட்ட இடத்திற்கு வந்த புதுச்சேரி தி.மு.க மாநில அமைப்பாளரும், சட்டப்பேரவை கட்சித் தலைவருமான சிவா எம்.எல்.ஏ மற்றும் எஸ்.பி ரங்கநாதன் ஆகியோர் உறவினர்களுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். அதையடுத்து 3 மணியளவில் சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.