Skip to main content

கேரளா:5 கி.மீ. தொலைவு தூக்கி வீசப்பட்ட உடல்கள்....கொத்துக் கொத்தாக நிலச்சரிவில் சிக்கிய தென்மாவட்டக் கிராம மக்கள்!!!


அடை மழைச் சரித்திரத்தில் இது போன்ற பேரிடர் கொத்துக் கொத்தாக நடந்ததில்லை என்கிறார்கள் சமூக நல ஆர்வலர்கள். அத்தனை பயங்கரம் கொண்டது மூணாறு நிலச்சரிவு. புதையுண்டவர்களின் எண்ணிக்கை தோராயமாகத் தெரிகிறதேயொழிய உறுதியிட்டுச் சொல்ல முடியாமல் தவிக்கிறது கேரளா.

கேரளாவின் மூணாறு மலைமேலுள்ள ராஜமலை, பெட்டிமுடி எஸ்டேட்டிலிருக்கும் டாட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான கண்ணன் தேவன் டீ எஸ்டேட்டில் தேயிலை வளர்ப்பு மற்றும் தேயிலை பறித்தல் போன்ற கூலி வேலைகளுக்காக அங்கே சென்று குடியமர்ந்தவர்களில் 90 சதம் தமிழர்கள். குறிப்பாக இந்த வம்சாவழியினர் சுமார் 80 வருடங்களுக்கு முன்பே அங்கு சென்றவர்கள். அவர்களில் கணிசமானவர்கள் தூத்துக்குடி, நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களைச் சேர்ந்த அடித்தட்டு மக்களே. ஆண்டுக்கு எப்போதாவது தங்களின் பூர்வீகக் கிராமம் செல்பவர்களாம்.
 

சரிவைக் கொண்ட தேயிலை எஸ்டேட் பக்கமிருக்கும் பகுதியிலுள்ள பகுதிகளில் குடும்பம் குடும்பமாகக் குடியிருந்துள்ளனர். தோராயமாகப் பார்த்தால் தென்மாவட்டங்களிலிருந்து சுமார் 130 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பெண்டு பிள்ளைகளோடு அங்கு செட்டிலாகியுள்ளதாகத் தகவல்.

மலைப்பாங்கான பகுதியில் வருடம் தோறும் மழை கொட்டுவது சகஜம் தான். அப்படிப் பெய்கிற மழைகாரணமாக அந்த தேயிலை விவசாய பூமியானது சிறுகச்சிறுக தனது பிடிமானத்தை இழந்திருப்பதாகத் தெரிவிக்கின்றனர் மூணாறுப் பகுதியினர். இந்த நிலையில் தான் கடந்த 6ம் தேதியன்று இரவு அடைமழை கொட்டித் தீர்த்திருக்கிறது. அது சமயம் மக்கள் குடியிருப்பை ஒட்டியுள்ள பகுதியின் பள்ளத்தாக்கில் ஓடுகிற ஆறு வெள்ளப் பெருக்கெடுத்திருக்கிறது. அடுத்த நொடித் தேயிலைத் தோட்டச் சரிவு பகுதிகள் வெள்ளத்தால் சரிந்து, விதி, குடியிருப்புப் பகுதிகளின் மீது விழ, அங்குள்ள மொத்த வீடுகளும் இதில் புதைந்தும், தூக்கியும் வீசப்பட்டுள்ளன. பலவீடுகள் நொறுக்கப்பட்டு ஆற்றோடு போயுள்ளனவாம்.

நடு இரவு பெய்த மழையால் இந்தச் சரிவு விபரம் மூணாறு மாவட்டத்தின் நிர்வாகம் வரை எட்டவில்லையாம். விடிந்த பிறகு அரிதிலும் அரிதாகத் தப்பிப் பிழைத்து ஒரு சிலர் 15 கி.மீ. தொலைவு சென்று தகவல் கொடுத்த பிறகே நிலச்சரிவு பயங்கரம் வெளிப்பட்டு அரசு நிர்வாகம் அலர்ட் ஆகியிருக்கிறது. அதன் பிறகே மீட்புப் பணிகள் வேகமெடுத்திருக்கின்றன. உலகத்திலேயே கதற வாய்ப்பில்லாமல், குழந்தை குட்டிகளோடு புதையுண்டிருக்கின்றன அந்தக் குடும்பங்கள்.

பலர் சரிவின் போது தூக்கி வீசப்பட்டதில் பள்ளத்தாக்கில் ஓடுகிற ஆற்றோடு போனதாகவும் அஞ்சப்படுகிறது. அப்படி வீசப்பட்ட உடல்களும், அவர்களின் டி.வி. பெட்டிகள் போன்ற உடமைகள் 5 கி.மீ. தொலைவு தூக்கி வீசப்பட்டள்ளதாம். அரசு இதுவரையிலும் மாண்டவர்களின் எண்ணிக்கை 43 என்று தெரிவித்தாலும், எண்ணிக்கை நூறையும் தாண்டும் என்கிறார்கள். பலியான இவர்கள் அனைவரும் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பகுதியிலுள்ள தலையால் நடந்தான்குளம், பாரதி நகரின் 100க்கும் மேற்பட்டோர். அவர்களில் பன்னீர் செல்வம், தவசியம்மாள், மவுனிகா, முருகன், ராஜலட்சுமி, விஜிலா, மணிகண்டன் உள்ளிட்ட சிறியவர் முதல் பெரியவர்கள் வரை என்று 18 பேர்கள் தெரியவருகிறது. மீத முள்ளவர்கள் பற்றிய தகவல் கிடைக்கவில்லை எனக் கதறுகிறார்கள் இந்தக் கிராமத்தின் உறவினர்கள்.

அதே போன்று தென்காசி மாவட்டத்தின் புளியங்குடிப் பகுதியிலுள்ள காந்திராஜன் குடும்பம், வீரசிகாமணி அருகேயுள்ள புதுக்கிராமத்தின் அண்ணாத்துரை மற்றும் அங்குள்ள 12 பேர் என்று ஒட்டு மொத்தமாகப் புதைந்துள்ளனராம்.

அடுத்து நெல்லை மாவட்டத்தின் மானூர் பகுதியிலுள்ள பிள்ளையார்க்குளத்தின் 50க்கும் மேற்பட்டோர் அங்குள்ள தொகுப்பு வீடுகளில் வசித்தவர்கள். அத்தனை பேரும் புதைந்திருக்கலாம் என்று அஞ்சுகின்றனர் அங்குள்ள உறவினர்கள். இவர்கள் புதையுண்ட கயத்தாறு பகுதியினரின் சம்பந்த வழி உறவினர்கள். அதன்காரணமாக வேலைக்காக எஸ்டேட் சென்றவர்கள் என வேதனையைக் கொட்டுகின்றனர் உறவினர்கள.

நிலச்சரிவில் மாண்டவர்கள் பற்றி முழுவிபரம் தெரியாவிட்டாலும், குடும்ப எண்ணிக்கையின்படி நூறுகளை தாண்டலாம் என்ற பீதியும் கிராமங்களில் பரவியுள்ளது. பேரிடர் வரலாற்றில் ஜீரணிக்க முடியாத துயரத்தையும், வேதனையையும் ஏற்படுத்தியிருக்கிறது மூணாறு நிலச்சரிவு அழிவு பயங்கரம்.