ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 8 வயது சிறுமி ஆசிஃபா பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. நாட்டையே உலுக்கியுள்ள இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் பாதுகாக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுகின்றன. இன்னொரு பக்கம் படுகொலை செய்யப்பட்ட ஆசிஃபாவிற்கு நீதி கிடைக்க வேண்டி பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து ஜம்மு காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், இனி சிறுமிகளைப் பாலியல் வன்புணர்வு செய்தால், மரண தண்டனை வழங்குவதற்கான சட்டத்தை மாநில அரசு இயற்றும் என தெரிவித்திருந்தார். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் நாட்டில் நிகழும் இதுபோன்ற சம்பவங்களுக்கு குரல்கொடுக்காத மத்திய அரசை எழுப்பும் போராட்டத்தை நள்ளிரவில் நடத்திக் காட்டினார்.
இந்நிலையில், ஆசிஃபா படுகொலை குறித்து நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘அவள் உங்களது மகளாக இருந்திருந்தால்தான் இதைப் பற்றி புரிந்துகொள்வீர்களா? அவள் என் மகளாகவும் கூட இருந்திருக்கலாம். ஒரு ஆணாக, தந்தையாக மற்றும் இந்த நாட்டின் குடிமகனாக ஆசிஃபாவிற்கு நேர்ந்த துயரத்திற்காக கோபம் கொள்கிறேன். இங்கு நீ பாதுகாப்பாக வாழ்வதற்கான சூழலை உருவாக்காமல் இருந்துவிட்டதற்காக எங்களை மன்னித்துவிடு மகளே. உன்னைப் போன்ற குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் இப்படி நேர்ந்துவிடாமல் இருப்பதற்காகவேனும் நான் நீதிக்காக போராடுவேன் ஆசிஃபா. உனக்காக வருந்துகிறேன்.. உன்னை மறக்கவும் மாட்டேன்’ என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.