
ஜம்மு - காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதிக்குச் சென்ற சுற்றுலாப் பயணிகள் மீது கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி (22.04.2025) பயங்கரவாதக் கும்பல் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் 26 பேர் பரிதாபமாகக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இன்று (07.05.2025) நள்ளிரவு 01.44 மணி அளவில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் நள்ளிரவில் முப்படைகள் கூட்டாக இணைந்து அதிரடி தாக்குதல் நடத்தினர்.
அதாவது 9 இடங்களில் இலக்குகளை குறிவைத்து தீவிரவாத அமைப்புகளைத் துல்லியமாகத் தாக்கி அழிக்கப்பட்டதாக ராணுவ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலில் 26 தீவிரவாதிகள் உயிரிழந்ததாகவும், 60க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசுகையில், ''பாதுகாப்புப் படைகளின் நடவடிக்கையால் பயங்கரவாதிகளின் முகாம்களை குறிவைத்து தாக்கி அழித்துள்ளோம். இந்திய பாதுகாப்புப் படைகளின் நடவடிக்கையால் நாடே பெருமையடைகிறது. நள்ளிரவில் நமது படைகள் அதிதீரத்துடன் தாக்குதலை நடத்தியுள்ளன. பஹல்காம் தாக்குதலுக்கு பழிதீர்த்துவிட்டோம். சிறப்பாக செயல்பட்ட பாதுகாப்புப் படையினருக்கு சென்று சல்யூட். 'ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலில் பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை'' என்றார்.