
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியா நடத்திய தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தான் ராணுவத்தினருக்கும் இந்திய ராணுவத்தினருக்கும் இடையே தாக்குதல் சம்பவங்கள் நடந்தது. இதில், எல்லைகளை மீறி இந்தியாவின் முக்கிய நகரங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் நடத்தி வந்த தாக்குதல் முயற்சிகளையும், இந்தியா முறியடித்தது.
போர் சூழல் தணிந்து வரும் நிலையில், நேற்று (12/05/2025) இரவு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றி இருந்தார். இந்நிலையில் இன்று (13/05/2025) பஞ்சாபின் ஆதம்பூர் விமானப்படை தளத்தில் வீரர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு மேற்கொண்டார். பாகிஸ்தான் தாக்கி அழித்ததாகக் கூறிய எஸ்-400 வான் தாக்குதல் தடுப்பு அமைப்பு முன் நின்று பிரதமர் மோடி உரையாற்றினார். 'பாரத மாதா கி ஜெ' எனப் பேச்சைத் தொடங்கிய மோடி ''இந்திய பாதுகாப்புப் படையினர் நாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்ய தயாராக உள்ளனர். விமானப்படை இந்தியாவை பெருமை அடைய வைத்துள்ளது. வீரர்கள் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். அடுத்த தலைமுறைக்கான முன்னுதாரணமாக விமானப் படை வீரர்கள் செயல்பட்டுள்ளனர். 'ஆப்ரேஷன் சித்தூர்' வெற்றிக்கு விமானப்படை வீரர்களின் வீரமும் ஒரு காரணம். நாட்டின் பாதுகாப்புப் படையினரின் ஒட்டுமொத்த தேசத்தின் அடையாளம். அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது.

'ஆபரேஷன் சிந்தூர்' வெற்றி பெற்றதற்கு ஒட்டுமொத்த தேசமும் முப்படைகளுக்கு நன்றிக் கடன் பட்டுள்ளது. இந்தியா மீது கண் வைக்கும் பயங்கரவாதிகள் அழித்தொழிக்கப்படுவார்கள். 'ஆப்ரேஷன் சித்தூர்' என்பது வழக்கமான ராணுவ நடவடிக்கை அல்ல. நமது சகோதரிகளின் குங்குமத்தை அழித்த பயங்கரவாதிகளை நாம் அழித்துவிட்டோம். எதிரியின் குகைக்குள் நுழைந்து பயங்கரவாதிகளின் நிலைகளை அழிப்போம். இனி பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் பாதுகாப்பாக இருக்க முடியாது. இந்தியாவின் பராக்கிரமத்தை பாகிஸ்தானிடம் நாம் காட்டிவிட்டோம். பயங்கரவாதிகளை அவர்களுடைய சொந்த மண்ணிலேயே தாக்கி அழிப்போம்.

நமது ட்ரோன்கள், ஏவுகணைகளால் பாகிஸ்தான் சில நாட்களாகவே தூக்கத்தை தொலைத்து விட்டது. பயங்கரவாதிகளின் கூடாரங்கள் மட்டுமல்லாத பாகிஸ்தான் ராணுவத்தையும் வீழ்த்தியுள்ளோம். பாகிஸ்தான் பயணிகள் விமானங்களை வெட்கமே இல்லாமல் கேடயமாக பயன்படுத்தியது. எல்லைத் தாண்டி சென்று துல்லியமாக பயங்கரவாதிகளின் நிலைகளை ஒட்டுமொத்தமாக அழித்துள்ளோம். பயங்கரவாத முகாம்களை பலமாக தாக்க இந்தியாவின் நவீன பாதுகாப்பு அமைப்பே காரணமாக இருந்தது. ஒவ்வொரு முறையும் பாகிஸ்தானின் தாக்குதல்களை இந்திய வீரர்கள் தவிடுபொடியாக்கி உள்ளார்கள். வெறும் 20 நிமிடங்களில் பயங்கரவாதிகளின் 9 நிலைகளை தாக்கியுள்ளோம்'' என்றார்.