/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/rangasam4343422.jpg)
பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளை புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி புறக்கணிப்பதாகவும், பா.ஜ.க.விற்கு ஆதரவு தரும் சுயேட்சை எம்.எல்.ஏ.க்களை முதலமைச்சர் ரங்கசாமி அலட்சியப்படுத்திப் பழிவாங்குவதாகவும் கூறி முதலமைச்சர் ரங்கசாமி ராஜினாமா செய்ய வேண்டும் என கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பா.ஜ.க. ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ. அங்காளன் சட்டமன்ற வளாகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும் அவருக்கு பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் கல்யாணசுந்தரம் ஆதரவு தெரிவித்தார்.
தொடர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர் அங்காளன், சபாநாயகர் செல்வம் மற்றும் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் துணைநிலை ஆளுநர் மாளிகையில் ஆளுநரைச் சந்தித்து முறையிட்டதைத் தொடர்ந்து, மாலை உண்ணாவிரதப் போராட்டத்தை சட்டமன்ற உறுப்பினர் அங்காளன் முடித்துக் கொண்டார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/mini3232_0.jpg)
இந்நிலையில் கூட்டணியில் இருந்து கொண்டு முதலமைச்சரைப் பதவி விலகக் கோரிய பா.ஜ.க மற்றும் பா.ஜ.க ஆதரவு சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து அமைச்சர் லட்சுமி நாராயணன், துணை சபாநாயகர் ராஜவேலு, அரசு கொறடா ஆறுமுகம் மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை நடத்தினர். கூட்டணியில் இருந்து கொண்டே பா.ஜ.க.வினர் விமர்சனம் செய்வதை முதலமைச்சர் கண்டிக்க வேண்டுமென முதலமைச்சரிடம் சட்டமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய என்.ஆர்.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அரசு கொறடா ஆறுமுகம், "தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து கொண்டே முதலமைச்சரைப் பற்றி அவதூறாக பேசிய பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்களை கண்டிக்கிறோம். எந்த நிலையிலும், எங்கள் கட்சியின் தன்மானத்தை விட்டுக்கொடுக்க மாட்டோம். நாளை சபாநாயகர் வந்தவுடன் இதுகுறித்து பேசி முடிவெடுக்கப்படும்" என தெரிவித்தார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள முதலமைச்சர் ரங்கசாமியை மாற்றக் கோரும் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைக்கு என்.ஆர்.காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)