Skip to main content

''மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளோம்... மக்கள் நினைத்தால் முறியடிக்கலாம்...'' - பிரதமர் மோடி உரை!

Published on 20/04/2021 | Edited on 20/04/2021

 

'' We are affected again ... modi speech

 

இந்தியாவில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினசரி இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்குப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. கரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

 

இந்நிலையில் கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மருத்துவ வல்லுனர்கள், தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள், மருத்துவ நிறுவனங்களுடன் அடுத்தடுத்த ஆலோசனையில் பிரதமர் மோடி ஈடுபட்டிருந்த நிலையில், தற்பொழுது காணொலி வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அவர் பேசியதாவது, ''கரோனா  இரண்டாவது அலையாக உருவெடுத்து வந்திருக்கிறது.  கரோனா இரண்டாவது அலையால் மீண்டும் நாம் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளோம். கரோனாவால் நாம் மீண்டும் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்து வருகிறோம். கரோனாவின் இப்போதைய பாதிப்பிலிருந்து நம்மால் மீண்டு வர முடியும். நாட்டு மக்கள் அனைவரும் நினைத்தால் கரோனாவை முறியடிக்க இயலும் என நம்புகிறேன். கரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரின் துக்கத்தில் பங்கேற்கிறேன்.

 

இந்தச் சூழலில் நாம் அனைவரும் முன்களப் பணியாளர்களுக்கு துணையாக இருக்க வேண்டும். மக்களின் வலியை நான் புரிந்து கொள்கிறேன். அவர்கள் கஷ்டத்தில் பங்கெடுக்கிறேன். தங்கள் உயிரைப் பணயம் வைத்து முன்களப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், மருந்தாளுநர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் பாடுபடுகின்றனர். நம்முடைய பொறுமையை நாம் ஒருபோதும் இழந்துவிடக்கூடாது. ஆக்சிஜன் தேவையைப் பூர்த்தி செய்வதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறோம். நாம் தைரியத்துடன் போராட வேண்டும்.

 

மத்திய, மாநில அரசுகள் இணைவதோடு மட்டுமல்லாமல் மக்களும் இணைந்து சவால்களை எதிர்கொள்ள வேண்டும். மருத்துவ நிறுவனங்களுடன் உற்பத்தியை அதிகரிக்க தொடர்ந்து பேசி வருகிறேன். இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்ததைவிட மருந்து உற்பத்தி பல மடங்கு உயர்ந்துள்ளது. ஆக்சிஜன் தேவை அதிகரிப்பால் ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை நாம் பூர்த்தி செய்வோம். நாட்டில் மருந்து நிறுவனங்கள் உள்ளன. எனவே கவலை தேவையில்லை. இதுவரை 12 கோடிக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. உலகிலேயே இந்தியாவில்தான் மிகக் குறைந்த விலையில் தடுப்பூசிகள் விநியோகம் செய்யப்படுகிறது.

 

18 வயதுக்கு மேற்பட்டோரும் வருகின்ற ஒன்றாம் தேதி முதல் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். புலம்பெயர் தொழிலாளர்கள் தற்போது உள்ள இடங்களிலேயே நீடிக்க மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். முகக்கவசம் முதல் வெண்டிலேட்டர் வரை பெரிய அளவில் மருத்துவ சாதனங்களை உற்பத்தி செய்துள்ளோம். நாம் கட்டுப்படுவதன் மூலமே கரோனா பரவாமல் கட்டுப்படுத்த முடியும். வெளியே செல்லாமல் முடிந்தவரை வீட்டிலேயே இருந்து பணியாற்ற முன்வரவேண்டும். கரோனாவுக்கு எதிரான போரில் சரியான விஷயங்களை செய்ய இளைஞர்கள் முன்வர வேண்டும். கரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளை அதிகரிப்பதன் மூலம் நாடு முழுவதும் முழு முடக்கத்தைத் தடுக்கலாம். பொதுமுடக்கம் என்பதைக் கடைசி ஆயுதமாகவே மாநில அரசுகள் பயன்படுத்த வேண்டும்'' என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்