Wayanad, howling with death; The bodies of 106 people, including children, were recovered

தொடர் கனமழையால் கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கை என்ற இடத்தில் இன்று (30.07.2024) நள்ளிரவு 1 மணியளவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் அதிகாலை 4 மணியளவில் சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் சூரல்மலா என்ற இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த இரு நிலச்சரிவில் சுமார் 500 வீடுகள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிக்கி உள்ளதாகத் தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலச்சரிவில் சிக்கி குழந்தைகள் உட்பட பலர் உயிரிழந்துள்ளனர்.

இன்று (30/07/2024) மாலை 6.30 நிலவரப்படி இந்த நிலச்சரிவில் சிக்கி 106 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. குழந்தைகள் உட்பட 106 பேரின் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதைந்த 100க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மண் மற்றும் கட்டிட இடிபாடுகளில் சிக்கிய 98 பேரை காணவில்லை என்று கேரள அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. கேரளாவின் வயநாடு நிலச்சரிவு பகுதியில் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்கள் சூரல்மலா பகுதியில் தரையிறக்கப்பட்டு மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.