'Warning given to BJP' - Arvind Kejriwal welcomes

Advertisment

அண்மையில் சண்டிகர் மேயர் தேர்தலில் நடந்தவை ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் செயல் என உச்சநீதிமன்றம் தனது கடும் கண்டனத்தை வெளிப்படுத்திய நிலையில், இந்த விவகாரத்தில், சண்டிகர் தேர்தலில் பாஜக வெற்றி செல்லாது என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

சண்டிகர் மாநகராட்சி மேயர், மூத்த மேயர், துணை மேயர் ஆகிய பதவிகளுக்கான வாக்குப்பதிவு, பஞ்சாப் மற்றும் ஹரியானா நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி கடந்த 30-01-24 அன்று நடைபெற்றது. இந்தத் தேர்தலில், இந்தியா கூட்டணி சார்பில் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சியும் இணைந்து பா.ஜ.க.வை எதிர்த்துப் போட்டியிட்டன. அதன்படி, ஆம் ஆத்மியை சேர்ந்த குல்தீப் குமாரும், பா.ஜ.க.வை சேர்ந்த மனோஜ் சோங்கரும் மேயர் பதவிக்கு போட்டியிட்டனர். மேலும், மூத்த துணை மேயர் பதவிக்கு காங்கிரஸ் கட்சியின் குர்பிரீத் சிங்கும், பா.ஜ.க.வைச் சேர்ந்த குல்ஜீத் சந்தும் போட்டியிட்டனர். துணை மேயர் பதவிக்கு காங்கிரஸ் வேட்பாளர் நிர்மலா தேவியை எதிர்த்து பா.ஜ.க சார்பில் ராஜிந்தர் சர்மா போட்டியிட்டார்.

30-01-24 அன்று காலை வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், பிற்பகல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதில் மொத்தமுள்ள 36 ஓட்டுகளில், 16 ஓட்டுகள் பெற்று பா.ஜ.க வேட்பாளர் மனோஜ் சோங்கர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மேலும், இதில் ஆம் ஆத்மி மேயர் வேட்பாளர் குல்தீப் குமாருக்கு கிடைத்த 20 வாக்குகளில் 8 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டன. இதனையடுத்து, பா.ஜ.க குறுக்கு வழியில் வெற்றி பெற்றதாக ஆம் ஆத்மி கடுமையாக விமர்சனம் செய்து குற்றம்சாட்டியது. இந்நிலையில் சண்டிகர் மேயர் தேர்தல் முடிவை எதிர்த்து நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் வீடியோ ஆதாரங்களுடன் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கில் பல்வேறு கேள்விகளை உச்சநீதிமன்றம் எழுப்பியது. தொடர்ந்து எதிர்க்கட்சிகளும் தங்களது அதிருப்தியை தெரிவித்து வந்தன.

Advertisment

இன்று நடைபெற்ற விசாரணைக்குப் பின், சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது செல்லாது என அறிவித்துள்ள உச்சநீதிமன்றம், ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் குமார் வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளது. 'தனது அதிகார வரம்பை மீறித் தேர்தல் நடத்தும் அதிகாரி தவறு செய்துள்ளார். நடந்த சண்டிகர் மேயர் தேர்தலில் 8 வாக்குகள் செல்லாது எனச் சொல்ல எந்த முகாந்திரமும் இல்லை. தேர்தல் அதிகாரி செய்த தில்லுமுல்லு நடவடிக்கைக்காக ஒட்டுமொத்த தேர்தலையும் ரத்து செய்ய வேண்டிய அவசியம் இல்லை' எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

'Warning given to BJP' - Arvind Kejriwal welcomes

இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வரவேற்று வருகின்றன. 'உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பின் மூலம் பாஜகவின் இரட்டை வேடம் அம்பலமாகியுள்ளது. சிக்கலான நேரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவு மூலம் ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டுள்ளது. பாஜக மட்டுமின்றி ஒன்றிய அரசின் செயல்பாட்டையும் உச்சநீதிமன்ற தீர்ப்பு அம்பலப்படுத்தி உள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு பாஜகவிற்கு கொடுக்கப்பட்ட எச்சரிக்கை' என ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். 'சாதாரண மேயர் தேர்தலிலேயே தில்லுமுல்லு செய்யும் பாஜக, மக்களவைத் தேர்தலில் என்னென்ன தில்லுமுல்லு செய்யும்' என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.