Skip to main content

வக்பு மசோதா; நாடாளுமன்ற குழுவின் வரைவு அறிக்கைக்கு ஒப்புதல்!

Published on 29/01/2025 | Edited on 29/01/2025
Waqf Bill; Approval of the draft report of the parliamentary committee

இந்திய பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் இந்திய ரயில்வே துறைக்கு அடுத்தப்படியாக வக்பு வாரியத்தின் கீழ் தான் அதிக சொத்துக்கள் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த சொத்துக்களை கண்காணிப்பதற்காக 1954ஆம் ஆண்டி வக்பு சட்டம் கொண்டுவரப்பட்டு, 1958ஆம் ஆண்டில் அனைத்து மாநிலங்களிலும் வக்பு வாரியங்கள் அமைக்கப்பட்டது. அன்று முதல் வக்ஃபு சட்ட விதிகளின்படி, வக்ஃபு வாரிய சொத்துக்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில், கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் போது மத்திய சிறுபான்மை விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு வக்பு வாரிய திருத்தச் சட்ட மசோதாவைக் ஆகஸ்ட் 8ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்தார்.

அந்த மசோதாவில், இஸ்லாமிய பெண்கள், இஸ்லாமியர் அல்லாதோர் வக்பு வாரியத்தில் இடம்பெற செய்வது, வக்பு நிலத்தை அளவீடு செய்யும் அதிகாரத்தை மாவட்ட ஆட்சியர் அல்லது துணை ஆணையரிடம் மாற்றுவது உள்ளிட்ட பல்வேறு திருத்தங்கள் இடம்பெற்றிருந்தன. அப்போது இந்த மசோதாவிற்கு, எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இந்த சட்டத் திருத்த மசோதாவில் கடும் சர்ச்சைகள் இருக்கும் காரணத்தால், நாடாளுமன்றக் கூட்டுக் குழு ஒன்றை அமைத்து மசோதா குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தனர்.

அந்த கோரிக்கையை ஏற்று நாடாளுமன்ற கூட்டுக் குழுவை அமைக்கப்படவுள்ளதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்திருந்தார். அதன்படி, அந்த மசோதாவை ஆய்வு செய்வதற்காக 31 பேர் கொண்ட நாடாளுமன்றக் கூட்டுக்குழு அமைக்கப்பட்டது. அதாவது பா.ஜ.க. எம்.பி. ஜெகதாம்பிகா பால் தலைமையிலான இந்த கூட்டுக்குழுவில், மக்களவையில் இருந்து 21 பேர், மாநிலங்களவையில் இருந்து 10 பேர் என பா.ஜ.க, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் இடம்பெற்றிருந்தனர்.

இத்தகைய சூழலில் தான் வக்பு சட்டத் திருத்த மசோதாவைப் பரிசீலிக்கும் நாடாளுமன்ற கூட்டுக்குழுக் கூட்டங்கள் நடைபெற்றன. இந்த கூட்டத்தில் குழுவின் அறிக்கையை அவசரப்படுத்தக் கூடாது எனக் கூறி திமுகவின் எம்.பி. ஆ.ராசா, அப்துல்லா,  மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கல்யாண் பானர்ஜி உள்ளிட்டோர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து இந்த கூட்டுக்குழுவின் கூட்டம் இன்று (29.01.2025) மீண்டும் நடைபெற்றது.

Waqf Bill; Approval of the draft report of the parliamentary committee

அப்போது கூட்டுக்குழுவின் தலைவர் ஜெகதாம்பிகா பால் 655 பக்கங்கள் கொண்ட வக்பு சட்டத்திருத்த மசோதா அறிக்கையாக தயாரிக்கப்பட்டிருக்கிறது எனத் தெரிவித்தார். இந்நிலையில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி வக்பு சட்டத்திருத்த மசோதாவுக்கு நாடாளுமன்ற கூட்டுக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. பெரும்பான்மை வாக்குகள் அடிப்படையில் நாடாளுமன்ற வரைவு அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக 16 பேரும், எதிராக 11 பேரும்  வாக்குகளைச் செலுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. 

சார்ந்த செய்திகள்