/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/a1329_0.jpg)
ஆந்திரா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சராக இருந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் ஜெகன்மோகன் கட்சி தோல்வியை சந்தித்தது. தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியை பிடித்து சந்திரபாபு நாயுடு முதலமைச்சரானார். அப்போது இந்தியாவில் புகழ்பெற்ற திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழு தலைவர் ராஜினாமா செய்ததை தொடர்ந்து அந்த அறங்காவலர் குழு கலைந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 6 மாதமாக புதிய அறங்காவலர் குழு அமைக்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில் திருப்பதி திருமலை தேவஸ்தானத்தில் சுவாமி தரிசனம் செய்யவரும் பக்தர்களுக்கு தரப்படும் லட்டு பிரசாதத்தில் செய்ய பயன்படுத்தப்படும் நெய்யில் மாமிச கொழுப்பு கலந்து இருந்ததாக முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டி சர்ச்சையை உருவாக்கினார். அதன் புனிதத்தை காக்கபோகிறோம் என துணை முதலமைச்சர் பவன் கல்யாண் மலைக்கு நடைபயணம் சென்றார்.
அப்போது கோவில் அறங்காவலர் குழு குறித்து கேள்வி எழும்பியது, கோவில் அறங்காவலர் குழு இன்னும் நியமிக்கப்படவில்லை என தெரியவந்தது. உடனடியாக அறங்காவலர் குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அக்டோபர் 30 ஆம் தேதி இரவு ஆந்திரா முதலமைச்சரின் ஒப்புதலுடன் 24 பேர் கொண்ட அறங்காவலர் குழு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் வழக்கம் போல் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, தமிழ்நாட்டை சேர்ந்த மாநில அரசால் சிபாரிசு செய்யப்பட்டவர்கள் உறுப்பினர்களாகி உள்ளார்கள். தமிழ்நாட்டை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, ராமமூர்த்தி என இருவர் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அறங்காவலர் குழு தலைவராக சித்தூர் மாவட்டத்தை சேர்ந்தவரும் டிவி5 சேனலின் உரிமையாளர் பி.ஆர்.நாயுடு என்கிற பொல்லுநன்னி ராஜகோபால்நாயுடு நியமிக்கப்பட்டுள்ளார். இவர் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் நெருங்கிய ஆதரவாளர். தெலுங்கு தேசம் கட்சியின் நீண்ட கால உறுப்பினர்.
தமிழ்நாட்டில் இருந்து நியமிக்கப்பட்டுள்ள கிருஷ்ணமூர்த்தி வைத்தியநாதன், கடந்த 2015ஆம் ஆண்டு முதல் தேவஸ்தான உறுப்பினராக திரும்ப திரும்ப நியமிக்கப்பட்டு வருகிறார். இவர் காஞ்சி சங்கரமடத்தின் ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார். அதேபோல் அத்னோ இம்ரா பவர் கம்பெனியின் இயக்குநராக உள்ளார். பாஜகவை சேர்ந்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆதரவுடன் தொடர்ந்து இந்த பதவியில் இருந்து வருகிறார்.
திருப்பூர் மாவட்டம் குமாரநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் பி. ராமமூர்த்தி. தொழிலதிபராக இருந்து வருகிறார். அவரை அரசு சார்பில் சிபாரிசு செய்துள்ளனர், இதனால் அவரை நியமித்துள்ளனர். இதுக்குறித்து செய்தியாளர்களை சந்தித்த தலைவர் ராஜகோபால், திருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றும் பணியாளர்களில் வேற்றுமதத்தை சேர்ந்தவர்கள் வேறு பணிக்கு மாற்றலாமா அல்லது வி.ஆர்.எஸ் தரலாமா என்பது குறித்து அரசுடன் ஆலோசித்து முடிவு எடுப்போம். ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சிக்காலத்தில் திருப்பதி மலையின் புனிதம் கெட்டுவிட்டது. அதை சரி செய்வோம் என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/02 Raja.jpg)