Skip to main content

திரிபுராவில் ஆட்சி யாருக்கு ? - முழு வீச்சில் வாக்குப் பதிவு 

Published on 16/02/2023 | Edited on 16/02/2023

 

Voting for Tripura Assembly elections begins

 

கம்யூனிஸ்ட்களின் கோட்டையாகக் கருதப்பட்ட திரிபுராவில் கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது. 5 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் 60 தொகுதிகளைக் கொண்ட திரிபுராவுக்கு சட்டசபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள பாஜகவும், ஆட்சியைக் கைப்பற்ற மார்க்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தீவிர முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - காங்கிரசுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. 

 

இந்த நிலையில்,  திரிபுரா மாநில சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கியுள்ளது. இந்தத் தேர்தலில் 259 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மாநிலத்தில் மொத்தம் 28 லட்சத்து 13 ஆயிரம் வாக்காளர்கள் உள்ள நிலையில் காலை முதலே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். பதற்றமான வாக்குச் சாவடிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. நாகாலாந்து, மேகாலயா மாநிலங்களுக்கும் இந்த மாத இறுதியில் தேர்தல் நடைபெறவுள்ளதால், திரிபுராவில் இன்று பதிவாகும் வாக்குகள் மொத்தமாக சேர்த்து அடுத்த மாதம் 2 ஆம் தேதி மூன்று மாநில வாக்கு எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கபடவுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அக்பர், சீதா சர்ச்சை; அதிகாரி மீது திரிபுரா அரசு அதிரடி நடவடிக்கை

Published on 26/02/2024 | Edited on 26/02/2024
Tripura Govt action against named officer on Akbar, Sita lions Controversy

மேற்கு வங்க மாநிலத்தில் சிலிகுரி உயிரியல் பூங்கா ஒன்று இயங்கி வருகிறது. இந்த பூங்காவிற்கு, கடந்த 12 ஆம் தேதி திரிபுரா மாநிலத்தில் உள்ள செபாஜிலா உயிரியல் பூங்காவிலிருந்து இரண்டு சிங்கங்கள் கொண்டு வரப்பட்டன. அதில் 7 வயதுள்ள ஆண் சிங்கத்திற்கு ‘அக்பர்’ என்றும் 6 வயதுள்ள பெண் சிங்கத்திற்கு ‘சீதா’ என்றும் முன்னரே பெயரிடப்பட்டிருக்கிறது. மேலும் இந்த இரண்டு சிங்கங்களையும் ஒரே கூண்டில் அடைக்க உயிரியல் பூங்கா நிர்வாகம் முடிவு செய்ததாக சமீபத்தில் தகவல் வெளியாகி இருந்தது.

இதனையடுத்து, ‘சீதா’ மற்றும் ‘அக்பர்’ சிங்கத்தை ஒரே இடத்தில் அடைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்க மாநில விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில், ‘முகலாய மன்னரின் பெயரான அக்பர் என்ற பெயரையும் ராமாயணத்தில் வரும் சீதாவின் பெயரையும் சிங்கங்களுக்கு வைத்து ஒரே இடத்தில் வைக்கத் திட்டமிட்டுள்ளனர். இந்து மத வழக்கங்களில் சீதா தெய்வமாக கொண்டாடப்படுகிறார். எனவே, அக்பர் உடன் சீதாவை தங்க வைப்பது இந்து மதத்தை அவமதிக்கும் செயல். அதனால் அந்த சிங்கங்களின் பெயர் மாற்றப்பட வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து, இது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சௌகதா பட்டாச்சார்யா அமர்வில் கடந்த 22 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “சிங்கத்துக்கு அக்பர் என்று பெயர் வைப்பதை சீதா மட்டுமல்ல நானும் ஆதரிக்கவில்லை. இந்து, கிறிஸ்துவர், இஸ்லாமியர், மத போராளிகள், மரியாதைக்குரியவர்கள் பெயர்களை இனி விலங்குகளுக்கு வைக்க வேண்டாம். எனவே, சர்ச்சைகளைத் தவிர்க்க இரண்டு சிங்கங்களுக்கு வேறு பெயர்களை வைக்க வேண்டும்” என்று கூறி மாநில அரசிற்கு உத்தரவிட்டார். 

இந்த நிலையில், திரிபுரா உயிரியல் பூங்காவில் இருந்த சிங்கங்களுக்கு அக்பர், சீதா பெயர் வைக்கப்பட்டதற்காக, அம்மாநிலத்தின் தலைமை வனப் பாதுகாவலர் பிரபின் லால் அகர்வாலை திரிபுரா அரசு இடைநீக்கம் செய்து அதிரடி உத்தரவிட்டுள்ளது. 

Next Story

“2026ல் மக்களுக்கான பிரதிநிகள் நிறைய பேர் இருப்பாங்க” - விஷால் கணிப்பு

Published on 10/02/2024 | Edited on 10/02/2024
vishal about 2024 and 2026 election, his political party, and vijay tvk entry

விஷால் புது அரசியல் கட்சி தொடங்குவதாக சமீபத்தில் தகவல் வெளியானது. ஆனால் அதை திட்டவட்டமாக மறுத்து, “வரும் காலகட்டத்தில் இயற்கை வேறு ஏதேனும் முடிவு எடுக்க வைத்தால் அப்போது மக்களுக்காக மக்களின் ஒருவனாக குரல் கொடுக்க தயங்க மாட்டேன்” என அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் சென்னையில் உள்ள ஒரு பள்ளி விழாவில் கலந்து கொண்ட விஷால், பின்பு செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவரது இயக்கம் குறித்த கேள்விக்கு, “நற்பணி இயக்கம், குறிப்பிட்ட நாட்கள், பண்டிகை நாட்கள் மட்டும் இல்லாமல் எல்லா நாட்களிலும் செயல்படும். எங்கே பிரச்சனைகள் வந்தாலும் அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் தலைமைக்கு சொல்லிவிடுவார்கள். உடனே நாங்கள் சரி செய்வோம். படப்பிடிப்பிற்கு போகும் போது, அங்குள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை செய்வோம். அங்கு சின்ன சின்ன அடிப்படை வசதி கூட இல்லாமல் இருப்பது தர்மசங்கடமாக இருக்கிறது. அதனால் உதவிகளைப் பூர்த்தி செய்தால் மனசு சந்தோஷமாக இருக்கும். அந்த வகையில் நற்பணி இயக்கம் சார்பாக தொடர்ந்து பண்ணிக்கிட்டே இருப்போம்” என்றார்.

விஜய்யின் அரசியல் வருகை குறித்த கேள்விக்கு, “உண்மையிலேயே ஒரு ரசிகனா, தமிழ்நாட்டில் இருக்கும் குடிமகனா அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்போதே என்னுடைய கட்சி பெயர் என்ன, அவருடன் கூட்டணியா, என்பதெல்லாம் தேவையில்லை. என்னை பொறுத்தவரையில் மக்கள் சேவை செய்ய இத்தனை கட்சி தேவையில்லை. எல்லாருக்குமே ஒரே குறிக்கோள் தான். மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வது தான். அதற்கு இப்போது இருக்கிற கட்சிகளே அதிகம். அதைத் தாண்டி ஒருவர் நல்லது செய்ய வேண்டும் என நினைக்கிறார் என்றால், அவருடைய நம்பிக்கையில் தான் வருகிறார்” என்றார்.

மேலும், “அரசியல் என்பது பொதுப்பணி மற்றும் சமூக சேவை. அது ஒரு துறை கிடையாது. பொழுதுபோக்கிற்காக வந்துட்டு போகிற இடமும் கிடையாது. எல்லாரும் ஏதோ ஒரு விதத்தில் உதவி செய்திருப்போம். அந்த வகையில் அனைவரும் அரசியல்வாதி தான். இதில் மறைப்பதற்கு எதுவும் இல்லை. நான் அரசியலுக்கு வரமாட்டேன் என சொல்வது, அல்லது வரப்போறன்னு சொல்லிட்டு வராமல் இருப்பது...அப்படி எதுவும் இல்லை. அந்தந்த நேரத்தில், அதற்கான காலகட்டத்தில் முடிவெடுக்கப்படும். நடிகர் சங்கத்தில் நான் பொதுச்செயலாளராக ஆவேன் என எனக்கே தெரியாது. ஒரு நடிகனாக 2004ல் இருந்து செயல்பட்டு வருகிறேன். எனக்கு கார்டு கொடுத்த ராதாரவி அண்ணனை எதிர்த்து நிற்பேன் என கனவில் கூட நினைத்து பார்த்ததில்லை. அதே போல் தான் தயாரிப்பாளர்கள் சங்கத்திலும். அதனால் எல்லாமே அந்த காலம் எடுக்கக் கூடிய முடிவு தான்” என்றார்.

நாடாளுமன்ற தேர்தல் குறித்த கேள்விக்கு, “கண்டிப்பாக ஒரு பெரிய வெற்றியாக இருக்கும். நான் யாருக்கு ஓட்டு போட்டேன் என்பதை நேரம் வந்தால் சொல்லுவேன். இதற்கு முன்னாடி ஒரு முறை கேப்டன் அண்ணனுக்கு தான் ஓட்டு போட்டேன் என சொல்லியிருக்கிறேன். அதில் ஒளிவு மறைவு ஒன்னும் கிடையாது. சொன்னாலும் ஜெயிலில் பிடித்து போடமாட்டார்கள்” என்றார். 2026 தேர்தல் குறித்த கேள்விக்கு, “என்னுடைய கணிப்பின்படி 2026ல் மக்களுக்கான பிரதிநிகள் நிறைய பேர் இருப்பாங்க” என்றார்