சிகிச்சை அளித்ததற்காக மருத்துவரை மரத்தில் கட்டி வைத்துத் தாக்கிய கிராம மக்கள்!

Villagers tied a doctor to a tree and hit for providing treatment bihar

பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவரின் தாய்க்கு உதவியதற்காக மருத்துவர் ஒருவரை மரத்தில் கட்டி வைத்து கிராம மக்கள் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் கயா மாவட்டத்தின் ஜூராங் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜிதேந்திர யாதவ். இவர் அந்த கிராமத்தில் கிராம மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவரின் தாய்க்கு சிகிச்சை அளித்ததற்காக மருத்துவர் ஜிதேந்திர யாதவை மரத்தில் கட்டி வைத்து கிராம மக்கள் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இதில் மருத்துவர் ஜிதேந்திர யாதவ் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது.

ரத்த வெள்ளத்தில் மரத்தில் கட்டப்பட்ட நிலையில் ஜிதேந்திர யாதவ் நின்று கொண்டிருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ஜிதேந்திர யாதவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் தற்போது சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ், “தாலிபனில் விட பீகாரில் நிலைமை மோசமாக இருக்கிறது. பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவரின் தாய்க்கு சிகிச்சை அளிக்கச் சென்ற ஒரு மருத்துவரை மரத்தில் கட்டி வைத்து, அடித்து, இரத்தத்தில் நனைத்து விட்டுச் சென்றுள்ளது ஒரு கும்பல். 20 ஆண்டுகால ஊழல் நிறைந்த தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்குப் பிறகு, காவல்துறையும் நிர்வாகமும் குற்றங்களைத் தடுக்கவோ, குற்றவாளிகளைக் கைது செய்யவோ அல்லது நீதி வழங்கவோ முற்றிலும் இயலாதவர்களாக உள்ளனர். இதன் விளைவாக, மக்கள் சட்டத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொள்கிறார்கள். பீகார் குழப்பத்தில் உள்ளது, முதல்வர் மயக்கத்தில் இருக்கிறார், அரசாங்கம் குடிபோதையில் உள்ளது, அதிகாரிகளும் அமைச்சர்களும் கருவூலத்தைக் கொள்ளையடிப்பதில் மும்முரமாக உள்ளனர். நிர்வாகம் சீர்குலைந்துள்ளது” என்று கடுமையாக விமர்சித்தார்.

Bihar Doctor viral video
இதையும் படியுங்கள்
Subscribe