vijay condemn pudhucherry child issue

புதுச்சேரி மாநிலம் சோலை நகர் பகுதியைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுமி ஒருவர் அரசுப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயின்று வந்தார். கடந்த சனிக்கிழமை வழக்கம் போல தெருவில் தனது நண்பர்களுடன் விளையாடச் சென்றார். ஆனால், சிறுமி மாலை ஆகியும் வீடு திரும்பாததால், சிறுமியின் பெற்றோர் பல இடங்களில் தேடினர். சிறுமி காணாமல் போனது குறித்து முந்தியால்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். போலீசார் அக்கம்பக்கத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து சிறுமியைத் தேடி வந்தனர். அதனடிப்படையில் நேற்று மதியம் அங்குள்ள அம்பேத்கர் நகர் சாக்கடை கால்வாயில் சந்தேகத்திற்கிடமாக மூட்டை ஒன்று கிடப்பதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு சென்ற போலீசார் மூட்டையை கைப்பற்றிப் பிரித்துப் பார்த்த போது அதில் சிறுமி கை, கால்கள் கட்டப்பட்டு கிடந்தார்.

Advertisment

இந்த கொலையில் கஞ்சா குடிக்கும் இளைஞர்கள் சிறுமியின் கை கால்களைத் துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்துள்ளனர் எனச் சிறுமியின் தந்தை பேசும் ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. விசாரணையில் அந்த பகுதியைச் சேர்ந்த கருணாஸ் என்ற 19 வயது இளைஞன் மற்றும் அவனுக்கு உடந்தையாக விவேகானந்தன் (59) என்ற இரண்டு பேரும் சிறுமியைக் கடத்திச் சென்று விவேகானந்தன் வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ய முற்பட்டபோது, சிறுமி மயங்கி விழுந்துள்ளதால் அவரைக் கொலை செய்து மூட்டைக் கட்டி சாக்கடையில் வீசி இருப்பது தெரியவந்தது.

Advertisment

இந்தச் சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், சமூக வலைத்தளங்கள் மூலம் பலரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு உள்ளிட்டவர்கள் கண்டனம் தெரிவித்த நிலையில், நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமானவிஜய் தற்போது கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக த.வெ.க. எக்ஸ் தளப் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது, “புதுச்சேரி, முத்தியால் பேட்டையைச் சேர்ந்த 9 வயதுச் சிறுமி, பாலியல் துன்புறுத்தலால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், நெஞ்சைப் பதற வைக்கிறது. பெற்ற மகளை இழந்துபெருந்துயரத்துடன் உள்ள சிறுமியின் பெற்றோருக்குக் கனத்த இதயத்துடன் ஆறுதல் சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். சிறுமியை மிருகத்தனமாக, ஈவு இரக்கமின்றிப் படுகொலை செய்த கொலையாளிகளுக்குச் சட்டப்படி அதிகபட்ச தண்டனை பெற்றுத் தர, புதுச்சேரி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisment