
பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழு, தேர்தல் ஆணையர்கள் நியமனத்தை முடிவு செய்யும் என்று கடந்த 2023ஆம் ஆண்டின் போது உச்சநீதிமன்றம் தீர்ப்பு வெளியிட்டது. ஆனால், மத்திய அரசு புதிய சட்டம் அமல்படுத்தி, அந்த குழுவில் இருந்து தலைமை நீதிபதியை விலக்கி, நீதித்துறையின் பங்கை மத்திய கேபினட் அமைச்சருக்கு வழங்கியது. இந்த நியமனம், தேர்தல் ஆணையத்தின் சுதந்திரத்தை குறைப்பதாக விமர்சனங்கள் எழுந்தது.
இந்த நிலையில், இந்திய தலைமை தேர்தல் ஆணையர் பதவிக்காலம் விரைவில் முடியவுள்ளது. இந்திய தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் என்பவர் பொறுப்பு வகித்து வருகிறார். இவர், வரும் 18ஆம் தேதி ஓய்வு பெறுவதையடுத்து, புதிய தலைமை தேர்தல் ஆணையரை நியமிப்பதற்காக, பிரதமர் மோடி தலைமையிலான தேர்வுக் குழு வரும் 17ஆம் தேதி கூடவுள்ளது. இந்த சூழ்நிலையில், எந்தவொரு நிர்வாக நியமனத்திலும் தலைமை நீதிபதி ஈடுபடக்கூடாது என துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் கூறியுள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம், போபால் நகரில் தேசிய நீதித்துறை அகாடமியில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், “நம்முடையது போன்ற ஒரு நாட்டிலோ அல்லது வேறு எந்த ஜனநாயகத்திலோ, சட்டப்பூர்வ பரிந்துரைப்படி இந்திய தலைமை நீதிபதி, சிபிஐ இயக்குநரைத் தேர்ந்தெடுப்பதில் எவ்வாறு பங்கேற்க முடியும்? அதற்கு ஏதேனும் சட்டப்பூர்வ காரணம் இருக்க முடியுமா? அன்றைய நிர்வாகி ஒரு நீதித்துறை தீர்ப்புக்கு அடிபணிந்ததால் சட்டரீதியான பரிந்துரை வடிவம் பெற்றதை நான் பாராட்ட முடியும். ஆனால் மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது.
இது நிச்சயமாக ஜனநாயகத்துடன் ஒன்றிணைவதில்லை. எந்தவொரு நிர்வாக நியமனத்திலும் இந்திய தலைமை நீதிபதியை எவ்வாறு ஈடுபடுத்த முடியும்?. நீதித்துறை ஆணையின் மூலம் நிர்வாகம் என்பது ஒரு அரசியலமைப்பு முரண்பாடாகும். உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் இனி அதை தாங்க முடியாது. நிறுவனங்கள் தங்கள் எல்லைகளை மறக்கும்போது, இந்த மறதி ஏற்படுத்தும் காயங்களால் ஜனநாயகம் நினைவுகூரப்படுகிறது” என்று கூறினார்.