ADVERTISEMENT

நிலவில் ஏற்பட்ட அதிர்வுகள்

12:46 PM Sep 01, 2023 | mathi23

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்தியா சார்பில் நிலவின் தென் பகுதியை ஆராயக் கடந்த ஜூலை 14 ஆம் தேதி விண்ணில் பாய்ந்த சந்திரயான் - 3, நிலவின் ஈர்ப்பு விசைக்குள் செலுத்தப்பட்டு ஆகஸ்ட் 23 மாலை நிலவின் தென் துருவத்தில் இறங்கி சாதனை படைத்தது.

இதனையடுத்து, நிலவில் தென் துருவத்தில் ஆய்வு தொடர்பான ரகசியங்களைத் தேடும் பணியை பிரக்யான் ரோவர் தொடங்கி நகர்ந்து வருகிறது. ரோவரில் பொருத்தப்பட்டுள்ள கருவிகள், மண்ணில் உள்ள உலோகங்கள் பற்றிய விபரங்கள், அதன் தன்மையைப் பற்றியும் பரிசோதித்து வருவதாக இஸ்ரோ தெரிவித்திருந்தது. மேலும் பிரக்யான் ரோவர் நகர்ந்து சென்று ஆய்வுப் பணியை மேற்கொள்ளும் வீடியோவை இஸ்ரோ வெளியிட்டிருந்தது. பெங்களூரில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து இஸ்ரோ விஞ்ஞானிகள் ரோவரின் செயல்பாடுகள் மற்றும் அது மேற்கொள்ளும் ஆய்வுகள் குறித்த தகவல்களைக் கண்காணித்து வருகின்றனர்.

அதைத் தொடர்ந்து, ரோவரில் உள்ள ‘லிப்ஸ்’ என்ற கருவி நிலவின் மேற்பரப்பில் கந்தகம், அலுமினியம் உள்ளிட்ட தாதுக்கள் இருப்பதைக் கண்டறிந்து சரித்திர சாதனை படைத்துள்ளது. மேலும், விக்ரம் லேண்டர் ஆய்வுக் கருவியான ஆர்ஏஎம்பிஎச்ஏ எல்பி (RAMBHA LP) கருவி மூலம் நிலவின் மேற்பரப்பில் பிளாஸ்மா இருப்பதையும் கண்டறிந்து உறுதி செய்திருந்தது.

இந்த நிலையில், நிலவில் இயற்கையாக ஏற்பட்ட அதிர்வுகளை சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் பதிவு செய்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இஸ்ரோ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “விக்ரம் லேண்டரில் உள்ள இல்ஸா (ILSA) என்ற கருவி நிலவில் இயற்கையாக ஏற்பட்ட அதிர்வுகளைப் பதிவு செய்திருக்கிறது. இந்த நில அதிர்வு கடந்த ஆகஸ்ட் மாதம் 26 ஆம் தேதி அன்று ஏற்பட்ட அதிர்வு என்று இல்ஸா கருவி மூலம் தெரிய வந்துள்ளது. மேலும், மைக்ரோ எலக்ட்ரோ மெக்கானிக்கல் சிஸ்டம்ஸ் (MEMS) தொழில்நுட்ப அடிப்படையிலான அந்த கருவி, பிரக்யான் ரோவர் மற்றும் பிற பேலோடுகளின் இயக்கங்கள் காரணமாக ஏற்படும் அதிர்வுகளைப் பதிவு செய்துள்ளது. ரோவரின் செயல்பாடுகளையும், விக்ரம் லேண்டரில் உள்ள பிற கருவிகளையும் இல்ஸா கருவி தொடர்ந்து கண்காணித்து வருகின்றது. நிலவில் ஏற்பட்ட இந்த அதிர்வு குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்” என்று தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT