vaa

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் (வயது 93) டெல்லி எய்மஸ் மருத்துவமனையில் நேற்று மாலை 5 மணியளவில் காலமானார். வாஜ்பாய் வீட்டில் வைக்கப்பட்டு இருக்கும் அவரது உடலுக்கு இன்று காலை 7.30 மணி முதல் அஞ்சலி செலுத்திவருகின்றனர். அதன்பிறகு உடல் அங்கிருந்து, டெல்லி தீன்தயாள் உபாத்யாய் மார்க் பகுதியில் உள்ள பாரதீய ஜனதா தலைமை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு காலை 9 மணி முதல் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.

Advertisment

வாஜ்பாய் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ், முன்னாள் ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

Advertisment

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். மேலும், துணை சபாநாயகர் தம்பிதுரை, தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோரும் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினும், கனிமொழி எம்.பியும் இன்று அவரது உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். தயாநிதிமாறன், திருச்சி சிவா எம்.பி உள்ளிட்டோரும் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

Advertisment

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.

பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி முடிந்ததும், மதியம் 1 மணிக்கு வாஜ்பாயின் இறுதி ஊர்வலம் புறப்படுகிறது. வாஜ்பாயின் உடல் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அங்கிருந்து ஊர்வலமாக காந்தி சமாதி மற்றும் இந்திரா காந்தி சமாதி அருகே உள்ள ராஷ்ட்ரீய ஸ்மிரிதி ஸ்தல் என்ற இடத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு மாலை 4 மணி அளவில் முழு அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்படுகிறது.