மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில்
“அறிவுசார் சொத்து உரிமை மேல் முறையீட்டு வாரியம், 2003 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15 ஆம் நாள், சென்னையில் நிறுவப்பட்டது. 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற தோஹா மாநாட்டில் திறமையாக வாதாடி, காப்பு உரிமைச் சட்டங்கள் குறித்த பாதுகாப்பை ஏற்படுத்தித் தந்த, தொழில்துறை அமைச்சர் முரசொலி மாறன் மேற்கொண்ட முயற்சியால், அந்த வாரியம் அமைந்தது.
1999 வணிக உரிமைக் குறிகள் (Trademarks Act) சட்டத்தின்படியும், 1999 புவிசார் குறியீடு, வணிகப்பொருள்கள் பதிவு மற்றும் பாதுகாப்பு சட்டத்தின்படியும் (Geographical Indication of Goods Registration and Protection Act) பதிவாளர் எடுக்கின்ற முடிவுகள் குறித்த மேல்முறையீடுகளை, கடந்த 16 ஆண்டுகளாக, வினைத் திட்பத்துடன் கேட்டு, தீர்ப்பு வழங்கி வருகின்றது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/file76h5pjurz2h1hyoch3kw-1565705346.jpg)
சென்னையைத் தலைமை இடமாகக் கொண்ட இந்த வாரியத்தின் சுற்று அமர்வுகள், மும்பை, தில்லி, கொல்கத்தா, அகமதாபாத் ஆகிய இடங்களில் நடைபெறுகின்றன.
இந்த நிலையில், நடுவண் அரசு, இந்த வாரியத்தின் தலைமை அகத்தை, சென்னையில் இருந்து மாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு இருக்கின்றது. இதற்கான விருப்பத்தை, இந்திய அரசு வழக்குரைஞர் திரு கே.கே. வேணுகோபால், தலைமை நீதிபதி இடம்பெற்றுள்ள உச்சநீதிமன்ற அமர்வில் தெரிவித்து உள்ளார். இந்த வாரியத்தை, வட இந்தியாவிற்கு மாற்றுவது குறித்து, தொடர்பு உடைய துறைகளிடம் கருத்துக் கேட்பதற்காக, காலக்கெடு நீட்டிப்பு கேட்டு இருக்கின்றார்.
தற்போது இந்த வாரியத்திடம், 2800 வணிக உரிமைக் குறிகள் தொடர்பான வழக்குகளும், 600 காப்பு உரிமை வழக்குகளும் முறையீடு செய்யப்பட்டு உள்ளன. அமைவிடத்தால் அல்ல; மாறாக, வாரியத்தின் தலைவர் மற்றும் தொழில்நுட்ப உறுப்பினர்களைத் தேர்வு செய்வதில் ஏற்பட்ட காலதாமதத்தால் மட்டுமே வழக்குகள் தேங்கி இருக்கின்றன. எனவே, வழக்கு தொடுத்தவர்களுடைய வசதிகளைக் கருதி, நாடு முழுமையும் பரவலாக புதிய கிளைகளை அமைக்க, நடுவண் அரசு முன்வர வேண்டும்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/vaiko (1)_0.jpg)
மாறாக, தகுந்த காரணங்கள் எதுவும் இன்றி, வாரியத்தின் தலைமை அகத்தை இடம் மாற்றுவதற்காக நடுவண் அரசு மேற்கொண்டு இருக்கின்ற முயற்சிகள் நேர்மை அற்றவை, ஏற்றுக்கொள்ள முடியாதவை. எனவே, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான வழக்கு உரைஞர்கள் சங்கத்தினர், அரசின் இந்த முயற்சிகளைக் கடுமையாக எதிர்க்கின்றனர்.
இன்றைய தகவல் தொழில்நுட்ப உலகில், கணினிகளின் வழியாகவே மேல்முறையீடு செய்ய முடியும் என்கின்ற நிலையில், தலைமை அகத்தை இடம் மாற்றுவதற்கான தேவை எதுவும் இல்லை.
உச்சநீதிமன்றத்தின் கிளையை சென்னையில் நிறுவிட வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகின்ற நிலையில், சென்னையில் இருக்கின்ற அறிவுசார் சொத்து உரிமை மேல் முறையீட்டு வாரியத்தை, வட இந்தியாவுக்கு மாற்ற முயற்சிப்பது, இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிரானது.” என்று உரையாற்றினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)