/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/New Project (18)_3.jpg)
உத்தரப்பிரதேச அரசு, தங்கள் மாநிலத்தில் மக்கள் தொகையைக் கட்டுக்குள் வருவதற்காக மக்கள் தொகைகட்டுப்பாட்டுச் சட்டத்தைக் கொண்டுவரவுள்ளது. இந்த மக்கள் தொகை கட்டுப்பாட்டு சட்டத்தின் வரைவு மசோதா வரைவு தற்போது பொது மக்களின் கருத்துக்களுக்காக வெளியிடப்பட்டுள்ளது. அதில் இரண்டு குழந்தைகள் மட்டும் பெற்றுக்கொள்பவர்களுக்கு சலுகைகள் அளிப்பது உட்பட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்தச் சட்ட வரைவில், இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்பவர்கள் அரசு வேலைக்கு விண்ணப்பிக்க முடியாது. அரசின் நலத்திட்ட பயன்களைப் பெற முடியாது. குடும்பத்தில் நான்கு பேர்களுக்குமட்டுமே ரேஷன் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்பவர்கள் உள்ளாட்சி தேர்தல்களில் போட்டியிட முடியாது எனவும் சட்டவரைவில்தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் இரண்டு குழந்தைகள் மட்டும் பெற்றுக்கொள்பவர்களுக்குப்பல்வேறு சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு குழந்தைகள் கொள்கையைப் பின்பற்றும் அரசு ஊழியர்களுக்கு, கூடுதலாக இரண்டு ஊதிய உயர்வு வழங்கப்படும்;பிளாட் அல்லது வீடு வாங்க மானியம் அளிக்கப்படும்;தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பணியாளர் வருங்கால வைப்பு நிதியில் செலுத்தப்படும் தொகையில் மூன்று சதவீதம் அதிகரிப்பு செய்யப்படும்என இந்தச் சட்டவரைவில் கூறப்பட்டுள்ளது. கருத்தடை செய்துகொண்டு இரண்டு குழந்தைகளைத் தத்தெடுத்துக்கொள்பவர்களுக்கும் இந்தச் சலுகைகள் பொருந்தும் என கூறப்பட்டுள்ளது.
அதேபோல் ஒரேயொரு குழந்தையைப் பெற்றுக்கொள்ளும் அரசு ஊழியர்களுக்கு, இரண்டு குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளும் அரசு ஊழியர்களுக்கான சலுகைகளோடு சேர்த்து கூடுதலாக நான்கு ஊதிய உயர்வுகள் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. அதேபோல் அந்தக் குழந்தைக்கு 20 வயதாகும்வரை காப்பீடும், இலவச மருத்துவமும் வழங்கப்படும் எனவும், குழந்தைக்கு எய்ம்ஸ் போன்ற கல்வி நிறுவன சேர்க்கைகளில் முன்னுரிமை வழங்கப்படும் என அந்தச் சட்டவரைவில் கூறப்பட்டுள்ளது.
அரசு வேலையில் இல்லாதவர்கள், இரண்டு குழந்தைகள் கொள்கையைப் பின்பற்றினால் அவர்களுக்குத் தண்ணீர் வரி, மின் கட்டணம், வீட்டு கடன் உள்ளிட்டவற்றில் தள்ளுபடி வழங்கப்படும் எனவும் அந்தச் சட்டவரைவில் கூறப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)