மது போதையில் இருந்த இளைஞர் ஒருவர் தன்னை கடித்த விஷ பாம்பை திரும்ப கடித்து துண்டு துண்டாக்கிய சம்பவம் உத்தரபிரதேசம் மாநிலத்தில் நடந்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் ஈட்டா மாவட்டத்தில் உள்ள அஸ்ரோலி கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர், நேற்று மது போதையில் தனது வீட்டில் இருந்துள்ளார். அப்போது வீட்டுக்குள் நுழைந்த விஷப் பாம்பு ஒன்று ராஜ்குமாரை கடித்துள்ளது. இதனால் ஆவேசமடைந்த அவர், தன்னைக் கடித்த பாம்பை, கையால் பிடித்து, துண்டு துண்டாகக் கடித்து எறிந்துள்ளார்.
பாம்பை பல துண்டுகளாக கடித்து குதறியதில், அதன் விஷம் அவரது உடல் முழுவதும் பரவியுள்ளது. இந்த சம்பவத்தை கண்டஅவரது குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். மிகவும் மோசமான உடல்நிலையில் இருக்கும் அவருக்கு தற்போது தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது.