/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/fdfgfd.jpg)
திருமணத்திற்காக மதம் மாறுவதைத் தடுக்க அவசரச் சட்டம் ஒன்றைக் கொண்டுவந்துள்ளது உத்தரப்பிரதேச அரசு.
திருமணத்திற்காக மட்டும் மதம் மாறுவது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என அலகாபாத் உயர் நீதிமன்றம் அண்மையில் தெரிவித்திருந்தது. மேலும், அவ்வாறு திருமணத்தின்போது மதம் மாறுவது செல்லாது எனவும் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவைத் தொடர்ந்து உத்தரப்பிரதேசம், ஹரியானா, கர்நாடகா, மத்தியப்பிரதேசம் போன்ற பாஜக ஆளும் மாநிலங்கள் லவ் ஜிகாத்தை தடுக்க விரைவில் புதிய சட்டம் கொண்டு வரப்படும் என அறிவித்திருந்தன.
அதன்படி, லவ் ஜிகாத்தை தடுக்கும் சட்டத்திற்கான பரிந்துரையைத் தயார் செய்த உத்தரப்பிரதேச உள்துறை அமைச்சகம், அதனை உத்தரப்பிரதேச சட்ட அமைச்சகத்திற்கு அண்மையில் அனுப்பி வைத்தது. இந்த வரைவு சட்ட மசோதாவுக்கு இந்த வாரத் தொடக்கத்தில் உ.பி. அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதன்படி, கட்டாயமாக மதமாற்றம் செய்தல், நேர்மையற்ற முறையில் குறிப்பாகத் திருமணத்துக்காக மதம் மாறுதல், ஆகியவற்றில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று சட்ட மசோதாவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், அதுபோன்று நடத்தப்படும் திருமணம் சட்டப்படி செல்லாது என்று அறிவிக்கப்படும், திருமணத்துக்காக மதம் மாறினாலும் மதம் மாறிய பெண் தன்னுடைய மதத்தை மாற்ற விரும்பினாலும் அது சட்டப்படி ஏற்கப்படாது எனக் கூறப்பட்டிருந்தது.
அதுபோல கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுவோருக்கு ஓராண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும். சிறுமிகள், பட்டியலினத்தைச் சேர்ந்த பெண்களைக் கட்டாய மதமாற்றம் செய்பவர்களுக்கு 3 முதல் 10 ஆண்டுகள் வரை சிறையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டு,ஜாமீனில் வெளிவரமுடியாத குற்றமாகவும் கருதப்படும் எனக் கூறப்பட்டிருந்தது. உத்தரப்பிரதேச அரசு கொண்டுவந்த இந்த அவசரச் சட்ட மசோதா ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டிருந்த சூழலில், அம்மாநில ஆளுநர் ஆனந்தி பென்படேல் இன்று இந்த சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)