கொலை செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பெண் திரும்ப வந்ததால் பரபரப்பு!!

uttarpradesh girl who declared dead came alive to police

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கொலை செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பெண் ஐந்து நாட்களுக்கு பின் உயிருடன் வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம், காசியாபாத்தில் அண்மையில், ஒரு சூட்கேஸில் இறந்த நிலையில் பெண் உடல் கண்டெடுக்கப்பட்டது. அப்பெண்ணின் அடையாளங்களைக் கொண்டு போலீஸார் விசாரணை நடத்தியபோது, அலிகரைச் சேர்ந்த ஒரு பெண், அந்த உடல் காணாமல்போன தனது 25 வயது மகள் வாரிஷாவின் உடல் என அடையாளம் காட்டினார். மேலும், தனது மகளை அவரது மாமியாரும் கணவரும் கொடுமைப்படுத்தி கொன்றுவிட்டதாக புகார் அளித்தார். இதன் அடிப்படையில், கணவரும் மாமியாரும் கடந்த 28 ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதனைத்தொடர்ந்து, இந்த கொலையைக் கண்டுபிடித்ததற்காக காசியாபாத் காவலர்கள் குழுவிற்கு 15 ஆயிரம் ரூபாய் பரிசும் வழங்கப்பட்டது.

இந்நிலையில், உயிரிழந்ததாக கருதப்பட்ட பெண் வாரிஷா உயிருடன் திரும்பி வந்துள்ளது அம்மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அலிகரில், பெண் போலீஸ் ஒருவரை அணுகிய வாரிஷா, தனது கணவர் தன்னை தாக்கியதால், வீட்டிலிருந்து வெளியேறி, நோய்டாவுக்கு சென்று ஒரு தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்ததாக தெரிவித்துள்ளார். மேலும், தான் இறந்ததாக அறிவிக்கப்பட்டபோது தனது பெற்றோரிடம் நான் உயிரோடு இருக்கிறேன் எனக் கூறவந்தாக அவர் தெரிவித்துள்ளார். இறந்ததாக கூறப்பட்ட பெண் திரும்ப வந்த சூழலில், பெட்டியில் கண்டெடுக்கப்பட்ட உடல் யாருடையது என போலீஸார் மீண்டும் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

uttarpradesh
இதையும் படியுங்கள்
Subscribe