Skip to main content

‘நற்கருணை வீரன்’ - ரிஷப் பந்த்க்கு உதவிய ஓட்டுநருக்கு கௌரவம்

Published on 31/12/2022 | Edited on 31/12/2022

 

Uttarakhand Police reward Good Samaritan driver who helped cricketer

 

உத்தராகண்ட் மாநிலத்தில் நிகழ்ந்த கார் விபத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் படுகாயம் அடைந்தார். ரூர்க்கி பகுதியில் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத் தடுப்புச் சுவற்றில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் காரில் பயணித்த பிரபல கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் பலத்த காயம் அடைந்துள்ளார். உத்தராகண்டில் இருந்து டெல்லிக்கு காரில் திரும்பும்போது இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவித்தன.

 

ரிஷப் பந்த் வந்த கார் தீப்பிடித்து முற்றிலுமாகச் சேதம் அடைந்தது. அவ்வழியாகச் சென்ற அரசு பேருந்தில் இருந்த ஓட்டுநரும், நடத்துநரும் படுகாயமடைந்த ரிஷப் பந்த்தை மீட்டனர். அத்துடன் போலீசுக்கும் தகவல் கொடுத்தனர். முதலில் பந்த்க்கு ரூர்க்கி மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன் பின் டேராடூனில் உள்ள மருத்துவமனையில் மேல் சிகிச்சை அளிக்கப்பட்டது. ரிஷப் பந்த் தூக்கக் கலக்கத்தில் வாகனத்தை இயக்கியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. 

 

இதனிடையே அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ரிஷப் பந்த் அபாயக் கட்டத்தைத் தாண்டிவிட்டார் என்றும், அவருக்கு எலும்பு முறிவு எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்தனர். மேலும் ரிஷப் பந்த்திற்கு எம்.ஆர்.ஐ ஸ்கேன் செய்யப்பட்டது. அதில் மூளை மற்றும் தண்டுவடத்தில் எந்த பாதிப்பும் இல்லை என்பது உறுதியாகியுள்ளதாகவும், முகத்தில் ஏற்பட்ட காயங்களுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

இந்நிலையில், ரிஷப் பந்த் விபத்தில் படுகாயம் அடைந்த பிறகு அவரை விபத்தில் இருந்து காப்பாற்றிய பேருந்து ஓட்டுநர் சுஷில் மானுக்கு மத்திய அரசின் ‘நற்கருணை வீரன்’ என்ற விருதின் கீழ் கௌரவிக்கப்படவுள்ளதாக உத்தராகண்ட் டிஜிபி தெரிவித்திருக்கிறார். ஓட்டுநர் சுஷிலும் நடத்துநரும் தான் ரிஷப் பந்த்தின் கார் விபத்தை முதலில் பார்த்திருக்கின்றனர். ரிஷப் பந்த் காரில் இருந்து வெளியே வர சுஷில் உதவியதோடு, அவருக்குப் போர்வையைப் போர்த்தி ஆம்புலன்சில் ஏறவும் உதவி செய்திருக்கிறார். இது குறித்து அவர் கூறும் போது, “எங்களுக்கு அவர் கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் என்றெல்லாம் தெரியாது. கார் பற்றி எரிகிறதே, யாராவது உள்ளே சிக்கி இருக்கிறார்களா என்ற மனிதாபிமானத்தின் அடிப்படையில் அங்குச் சென்று பார்த்து உதவி செய்தோம்.” என்றார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

 
The website encountered an unexpected error. Please try again later.