/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/marriagen_2.jpg)
மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷி - சோனம் என்ற இளம் தம்பதி கடந்த மே மாதம் மேகாலயாவுக்கு தேனிலவு சென்ற போது திடீரென்று காணாமல் போனார்கள். பல நாள் தேடுதல் வேட்டைக்குப் பிறகு ராஜா ரகுவன்ஷி கொலை செய்யப்பட்ட நிலையில் உடல் கண்டெடுக்கப்பட்டது. அவரது மனைவி சோனமை தீவிரமாக தேடி வந்த நிலையில், அவர் தான் தனது கணவரை கூலிப்படைகளை வைத்து கொலை செய்ததாக அதிர்ச்சி தகவல் வெளியானது. வேறு ஒரு நபருடன் உறவு இருந்ததால், தேனிலவு சென்ற போது தனது கணவரை கூலிப்படைகளை வைத்து சோனம் கொலை செய்துள்ளதாக அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ள நிலையில், சிக்கிமுக்கு தேனிலவு சென்ற உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த புதுமணத் தம்பதி காணாமல் போயுள்ளனர். பா.ஜ.க தலைவர் உம்மத் சிங்கின் மருமகனும், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவருமான கெளஷலேந்திர பிரதாப் சிங் (29), கடந்த மே 5ஆம் தேதி அங்கிதா சிங் (26) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். புதுமணத் தம்பதிகளான இருவர் கடந்த மே 25ஆம் தேதி தேனிலவுக்காக சிக்கிமுக்கு சென்றனர்.
அங்கு மகிழ்ச்சியாக நாட்களை கழித்த இவர்கள், மே 29ஆம் தேதி வாகனம் ஒன்றில் லாச்சனில் இருந்து லாச்சுங்கிற்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். இந்த வாகனத்தில் உள்ளூர் ஓட்டுநர், புதுமணத் தம்பதி, உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த இருவர், திரிபுராவைச் சேர்ந்த இருவர் மற்றும் ஒடிசாவைச் சேர்ந்த நால்வர் என 11 பேர் இருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, பெய்த கனமழையால் தீஸ்டா ஆற்றில் வாகனம் விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதில் வாகனத்தில் இருந்த அனைவரும் காணாமல் போயுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மீட்புக் குழுவினர், புதுமணத் தம்பதி உள்பட அனைவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர். தொடர்ச்சியான முயற்சிகள் இருந்த போதிலும், இதுவரை எந்த உடல்களோ அல்லது உயிர் பிழைத்தவர்களோ கண்டுபிடிக்க முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர். தம்பதியரின் உடைமைகள் ஹோட்டலில் இருந்து மீட்கப்பட்டாலும், அவர்கள் ஆற்றில் மூழ்கி இறந்தார்களா என்பதை உறுதிப்படுத்த இன்னும் உறுதியான ஆதாரங்கள் இல்லை என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)