Skip to main content

மட்டமான கழிப்பறை… மோசமான சாப்பாடு… கொதித்த கரோனா மருத்துவர்கள்! குறைதீர்த்த உ.பி. அரசு!

Published on 24/04/2020 | Edited on 24/04/2020


தமிழகத்தில் கரோனா பணியில் ஈடுபடும் மருத்துவர்கள் இறந்தால் அவர்களுக்கான இறுதிக் காரியங்கள் நடத்தக்கூட வழியில்லாதபடி எதிர்ப்பு எழுகிறது. அவர்களுக்கு உரிய இறுதி மரியாதைச் செலுத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லையென என பிரச்சனையெழுந்தது. இதையடுத்து மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு அரசு மரியாதையுடன் இறுதி மரியாதை நடைபெறும். இதற்கு இடையூறு செய்பவர்கள் கைதுசெய்து சிறையிலடைக்கப்படுவர் என முதல்வர் உறுதியளித்துள்ளார்.
 

 

உத்தரபிரதேசத்திலும் கரோனா மருத்துவர்கள் விஷயத்தில் வேறுவிதத்தில் சர்ச்சையெழுந்திருக்கிறது. உ.பி. மாநிலத்தின் ரேபரேலி பகுதியில் தற்சமயம் 43 கரோனா தொற்றாளர்கள் காணப்படுகின்றனர். இப்பகுதியில் கரோனா சிகிச்சை மற்றும் தடுப்பு பணியில் ஈடுபடும் மருத்துவர்களின் குடும்பங்களுக்குத் தொற்று ஏற்படுவதைத் தடுக்க, மருத்துவர்கள் தங்குவதற்கு அரசு பள்ளியொன்று கெஸ்ட் ஹவுசாக ஒதுக்கப்பட்டது.
 

 

அந்தப் பள்ளியில் மருத்துவர்களுக்குப் போதிய வசதி இல்லாததையடுத்து அங்கு நிலவும் சூழலை மருத்துவர்கள் மூன்று வீடியோக்களாக எடுத்து சமூக ஊடகங்களில் பரப்பினர். இதையடுத்து மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 

 

up


 

http://onelink.to/nknapp


அந்த மூன்று வீடியோக்களில் ஒன்றில், “இப்ப அதிகாலை 3 மணி. இங்க கரெண்ட் இல்லை. ஒரே ரூம்ல நான்கு படுக்கைப் போட்டிருக்காங்க. இந்த அறையில மின்விசிறிகூட வேலைசெய்யலை. இங்க இருக்கிற பாத்ரூமைக் காட்டுறேன் பாருங்க. சிறுநீர் அறையில குழாயே இல்லை. கழிப்பறை அடைச்சுக்கிட்டு இருக்கு” என ஒருவர் நிலவரத்தைப் படம்பிடித்துக்காட்டுகிறார்.
 

up


இரண்டாவது வீடியோவில் கரோனா பாதுகாப்பு உடையிலிருக்கும் மருத்துவர் ஒருவர், “ஒரு பள்ளியோட பெரிய வகுப்பறையில படுக்கை வசதி செஞ்சிருக்காங்க. ஒவ்வொரு ரூம்லயும் நாலு படுக்கைங்க. ஒருத்தர்கிட்ட கரோனா தொற்று இருந்தா மற்றவங்களுக்கு பரவக்கூடாதுனுதான் குவாரண்டைன் பண்றாங்க. பாத்ரூம் பற்றி புகார் கொடுத்ததும் நடமாடும் கழிவறையைக் கொண்டுவந்து வெச்சாங்க. இன்னும் இங்க மின்சாரம் வரலை. 20 லிட்டர் தண்ணீர் பாட்டிலைக் கொண்டுவந்து நாலுபேரும் ஷேர் பண்ணிக்கோங்கனு சொல்றாங்க” என்கிறார்.

 

up


மூன்றாவது வீடியோவில் மருத்துவர்களுக்கு வழங்கப்படும் தரமில்லாத உணவைக் காட்டுகிறார்கள். “பாலிதீன் காகிதத்தில் பூரியும் சப்ஜியும் ஒன்றாகக் கலந்து இருப்பதைத் தருகிறார்கள். இதுதான் கரோனா நோயாளிகளைக் குணப்படுத்தும் மருத்துவர்களுக்கும் சுகாதாரப் பணியாளர்களுக்கும் தரப்படுகிறது” என்கிறது முகம் காட்டாத ஒரு குரல்.
 

இந்த வீடியோக்கள் மக்கள் மத்தியில் பரவி வைரலானதும் உ.பி. தலைமை மருத்துவ அலுவலர் எஸ்.கே. ஷர்மா அந்தப் பள்ளியைப் பார்வையிட்டுவிட்டு மருத்துவர்களை வேறொரு கெஸ்ட் ஹவுஸ்க்கு மாற்ற உத்தரவிட்டார். அத்தோடு மருத்துவர்களுக்கு நல்ல உணவும் கிடைக்கும்படி ஒரு சமையலறையையும் ஏற்பாடு செய்திருக்கிறார்.
 

இதை முதலிலே செய்திருந்தால், இந்தக் கெட்ட பெயரைத் தவிர்த்திருக்கலாமே!
 

- க.சுப்பிரமணியன்


 

சார்ந்த செய்திகள்

Next Story

மணமகன் வராததால் அண்ணனையே திருமணம் செய்துகொண்ட இளம்பெண்!

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
A young girl who married her brother because the groom did not come

மாநில அரசு சார்பில் நடைபெற்ற திருமண விழாவில் மணமகன் வராததால், அரசு நிதியுதவியைப் பெறுவதற்காகத் தனது அண்ணனையே ஒரு பெண் திருமணம் செய்து கொண்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், உத்தரப் பிரதேச மாநில அரசின் சமூக நலத்துறை சார்பில் அவ்வப்போது ஏழை மணமக்களுக்கு ஒரே இடத்தில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், திருமணம் செய்யும் மணமக்களுக்கு ரூ. 51,000 மதிப்புள்ள பொருட்கள், ரொக்கம் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், கடந்த 5 ஆம் தேதி அன்று மகராஜ்கஞ்ச் பகுதிக்கு அருகே உள்ள லகிம்பூரில் உத்தரப் பிரதேச மாநில அரசு சார்பில் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான மணமக்கள் கலந்து கொண்டனர். இதில், திருமணமான பெண்ணான பிரீத்தி யாதவ், அரசு நிதியுதவி பெறுவதற்காகப் பொய்யாக மீண்டும் தனது கணவர் ரமேஷ் யாதவ்வை திருமணம் செய்ய இருந்துள்ளார். ஆனால், குறித்த நேரத்தில் ரமேஷ் யாதவ் வரவில்லை.

இந்த நிலையில், அரசு நிதியுதவியைத் தவறவிடக் கூடாது என்று, பிரீத்தி யாதவின் அண்ணன் கிருஷ்ணாவை திருமணம் செய்வது போல் நடிக்குமாறு அங்குள்ள தரகர்கள் பிரீத்தி யாதவ்விடம் கூறியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனை ஏற்றுக்கொண்ட பிரீத்தி யாதவ், தனது அண்ணன் கிருஷ்ணாவை திருமணம் செய்துகொண்டுள்ளார். இந்த விவகாரம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில், நிர்வாக அதிகாரியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், அரசு நிதியுதவி பெறுவதற்காக பொய்யாகத் திருமணம் செய்துகொண்ட பிரீத்தி யாதவ், ரமேஷ் யாதவ், கிருஷ்ணா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

திட்டமிட்டு இரு குழந்தைகள் கொலை? குழம்பும் போலீஸ்!

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
A saloonkeeper who incident two children in uttarpradesh

உத்தரப்பிரதேசம் மாநிலம், புடான் பகுதி அருகே உள்ள பாபா காலணியைச் சேர்ந்தவர் வினோத் குமார். இவருக்கு திருமணமாகி ஆயுஷ் (12), யுவராஜ் (10) மற்றும் அஹான்(8) என்ற 3 மகன்கள் இருந்தனர். வினோத் வசித்த வீட்டின் எதி்ரே, சஜித் என்பவர் முடி திருத்தம் செய்யும் கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். வினோத்தும், சஜித்தும், எதிர் எதிரே இருப்பதால், இவர்களுக்குள் நல்ல பழக்கம் ஏற்பட்டு வந்துள்ளது. 

இந்த நிலையில், சஜித் தனது சகோதரர் ஜாவத்தை அழைத்துக் கொண்டு நேற்று (19-03-24) இரவு, வினோத் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு சென்ற சஜித், தனது மனைவிக்கு குழந்தை பிறக்க இருப்பதால் செலவுக்கு ரூ.5,000 பணம் வேண்டும் என்று வினோத் மனைவியிடம் கேட்டுள்ளார். அப்போது, வினோத்தின் மனைவி பணம் எடுப்பதற்காக வீட்டிற்குள்ளே சென்ற போது, தனக்கு உடம்பு சரியில்லை, அதனால் வீட்டு மாடியில் சிறிது நேரம் நடந்து வருகிறேன் என்று கூறி சஜித் மாடிக்கு சென்றுள்ளார். மேலும், சஜித் தன்னுடன் வினோத்தின் மூன்று மகன்களையும் அழைத்து மாடிக்கு சென்றுள்ளார். இதனையடுத்து, பணத்தை எடுத்து வினோத்தின் மனைவி மாடிக்கு சென்ற போது, சஜித் மற்றும் அவரது சகோதரர் ஜாவத் ஆகியோர் தனது 3 மகன்களை கத்தியால் குத்திவிட்டு நின்றதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். அங்கு வினோத்தின் மனைவி, இதனைக் கண்டதும் சஜித்தும் அவரது சகோதரர் ஜாவத் ஆகியோர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். 

இதனிடையே, அங்கு வினோத்தின் மகன்கள் கத்தியால் குத்துப்பட்டு படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தனர். இதில், ஆயுஷ் மற்றும் அஹான் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து, யுவராஜ் மீட்கப்பட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், கொலை செய்யப்பட்ட இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அவர்கள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், வினோத்துக்கும் சஜித்துக்கும் எந்தவித முன்விரோதமும் இல்லை என்றும், சம்பவம் நடந்த அன்று வினோத் வீட்டில் இல்லாத நேரத்தை அறிந்து சஜித்தும் ஜாவத்தும் இந்த கொலையை செய்துள்ளனர் என்பது தெரியவந்தது. மேலும், இந்த கொலைக்கான முழு காரணம் என்ன என்பது தெரியவில்லை என்று போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. 

இதனைத் தொடர்ந்து, இரண்டு கொலைகளைச் செய்த கொலையாளிகளை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது சஜித் போலீசாரிடம் பிடிபட்டார். ஆனால், போலீசாரிடம் இருந்து தப்பிப்பதற்காக போலீசாரை தாக்கி சஜித் தப்பிக்க முயன்றுள்ளார். தப்பிக்க முயன்ற சஜித்தை போலீசார் சம்பவ இடத்திலேயே துப்பாக்கியால் சுட்டு என்கவுண்டர் செய்தனர். மேலும், சஜித்தின் சகோதரர் ஜாவத்தை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இரண்டு குழந்தைகள் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.