Skip to main content

யாருக்குச் சபாநாயகர் பதவி?; ஐக்கிய ஜனதா தளம் அறிவிப்பு!

Published on 14/06/2024 | Edited on 14/06/2024
United Janata Dal Announcement on Who has the position of Speaker?

ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்தல் பரப்புரையில், அதிக பெரும்பான்மையாக 400 இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைப்போம் என பா.ஜ.க தொடர்ந்து கூறி வந்தது. ஆனால், ஜூன் 4ஆம் தேதி வெளியான தேர்தல் முடிவுகள் பா.ஜ.கவுக்கு பெரும் ஏமாற்றத்தைப் பெற்றுத் தந்தது. 

543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றுள்ளது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பா.ஜ.க தனித்து 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தது. இதனால் ஆட்சி அமைக்கத் தனிப்பெரும்பான்மை இல்லாத பா.ஜ.கவுக்கு, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளார். 

இதற்கிடையில், பா.ஜ.கவுக்கு ஆதரவளித்த தெலுங்கு தேசம் கட்சியும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியும்,  பல்வேறு நிபந்தனைகள் விதித்துள்ளதாகத் தகவல் வெளியானது. அதில், மூன்றுக்கும் மேற்பட்ட கேபினட் அமைச்சர்கள் பதவியைத் தெலுங்கு தேசம் கட்சிக்கு வழங்க வேண்டும் என்றும் சபாநாயகர் பதவியை எதிர்பார்ப்பதாகவும் தகவல் வெளியானது. அதே போல், ரயில்வே உள்ளிட்ட முக்கிய துறைகளை ஒதுக்க வேண்டும் என்றும், சபாநாயகர் பதவி தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்றும் ஐக்கிய ஜனதா தளம் எதிர்பார்ப்பதாகத் தகவல் வெளியானது. 

இதனிடையே, மக்களவையின் முதல் கூட்டத்தொடர் வரும் ஜூன் 24ஆம் தேதி தொடங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஜூன் 24ஆம் தேதி தொடங்கும் மக்களவைக் கூட்டத்தொடர் ஜூலை 3ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது. அதேபோல், மக்களவை சபாநாயகர் தேர்தல் ஜூன் 26ஆம் தேதி நடைபெறும் என மக்களவை செயலகம் நேற்று அறிவிப்பு வெளியிட்டது. 

இந்த நிலையில், மக்களவை சபாநாயகர் தேர்தலில் பா.ஜ.க வேட்பாளருக்கு ஆதரவளிப்பதாக ஐக்கிய ஜனதா தளம் தெரிவித்துள்ளது. இது குறித்து, ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் கே.சி.தியாகி கூறுகையில், “ஐக்கிய ஜனதா தளம் கட்சி,  தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் வலுவாக உள்ளன.  சபாநாயகர் பதவிக்கு பா.ஜ.க பரிந்துரைக்கும் வேட்பாளரை நாங்கள் ஆதரிப்போம்” என்று கூறினார். 

சார்ந்த செய்திகள்

 

Next Story

ஆளும் கட்சியை வீழ்த்தி சுயேட்சை வேட்பாளர் நிகழ்த்திய சாதனை; படுதோல்வியில் நிதிஷ்குமார்!

Published on 13/07/2024 | Edited on 13/07/2024
independent candidate won at byelection in bihar

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி திமுக எம்.எல்.ஏ புகழேந்தி உயிரிழந்ததைத் தொடர்ந்து அந்தத் தொகுதிக்குக் கடந்த 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் தி.மு.க சார்பில் அன்னியூர் சிவா, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா, பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பில் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் சி.அன்புமணி ஆகியோர் போட்டியிட்டனர். இதில், திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 1,24,053 வாக்குகள் பெற்று 67,757 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இதேபோன்று விக்கிரவாண்டி தொகுதியையும் சேர்த்து இந்தியாவில் உள்ள 7 மாநிலங்களில் உள்ள 13 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில் இன்று வாக்கு எண்ணும் பணிகள் தீவிரமாக நடந்தது. இதில் 10 தொகுதிகளில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. 

இதில் பீகாரின் ரூபாலி தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் கட்சி சார்பில் கலாதர் பிரசாத் மண்டல், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி சார்பில் பீமா பாரதி ஆகியோர் போட்டியிட்டனர். இதில், லோக் ஜன சக்தி சார்பில் ஏற்கெனவே எம்.எல்.ஏவாக பொறுப்பு வகித்து வந்த சங்கர் சிங், தற்போது அந்த தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டார். 

இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், சுயேட்சை வேட்பாளர் சங்கர் சிங் 68,070 வாக்குகள் பெற்று பெற்றியிருக்கிறார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஐக்கிய ஜனதா தள வேட்பாளர் கலாதர் பிரசாத் மண்டல் 59,824 வாக்குகள் பெற்று 8,246 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளார். இதனால், பீகாரில் ஐக்கிய ஜனதா தள தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி படுதோல்வி அடைந்துள்ளது. 

Next Story

சபாநாயகர் தேர்தல்; களத்தில் இறங்கிய இந்தியா கூட்டணி! 

Published on 25/06/2024 | Edited on 25/06/2024
Election of Speaker; India alliance in the field!

ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. இதனையடுத்து நாட்டின் பிரதமராக மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பதவியேற்கும் விழா டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் கடந்த 9 ஆம் தேதி (09.06.2024) நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 18 வது மக்களவையில் முதல் கூட்டத்தொடர் நேற்று (24.06.2024) காலை 11 மணியளவில் தொடங்கியது. இந்த கூட்டத் தொடரையொட்டி மக்களவைக்குப் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்களுக்கு தற்காலிக சபாநாயகர் பர்த்ருஹரி மகதாப் பதவிப்பிரமாணம் செய்து வைத்து வருகிறார்.

இத்தகைய சூழலில் தான் மக்களவை சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (25.06.2024) நடைபெறுகிறது. இதனையொட்டி மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் பேசினார். அப்போது, சபாநாயகர் தேர்தலை போட்டியின்றி ஒருமனதாக நடத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். மேலும் சபாநாயகர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படும் பாரம்பரியம் தொடர வேண்டும் என்றார் ராஜ்நாத் சிங். இதற்கிடையே மக்களவையின் சபாநாயகர் பதவிக்கு பாஜக எம்பிகளில் ஒருவரும் முன்னாள் மக்களவை சபாநாயகருமான ஓம் பிர்லா தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். 

Election of Speaker; India alliance in the field!

இது தொடர்பாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி அளித்த பேட்டியில், “சபாநாயகராகப் போட்டியிடும் வேட்பாளரை ஆதரிப்போம் என்று ராஜ்நாத் சிங்கிடம் கூறியுள்ளோம். ஆனால் துணை சபாநாயகர் பதவி எதிர்க்கட்சிகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. ராஜ்நாத் சிங், மல்லிகார்ஜுன கார்கேவை அழைத்து சபாநாயகருக்கு ஆதரவு தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டார். எனவே சபாநாயகர் வேட்பாளரை ஆதரிப்போம். மேலும் துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு வழங்க வேண்டும் எனக் கூறினோம். ஆனால் இதுவரையில் எந்த பதிலும் வரவில்லை. எதிர்க்கட்சிகளை மோடி அரசு அவமதித்துவிட்டது” எனத் தெரிவித்தார். இதனால் சபாநாயகர் பதவிக்கு இந்தியா கூட்டணி சார்பில் வேட்பாளரை நிறுத்த முடிவு செய்யப்பட்ட தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் 18வது மக்களவையின் சபாநாயகர் பதவிக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த  எம்.பி. கொடிக்குன்னில் சுரேஷ் வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது இந்தியா கூட்டணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடன் இருந்தனர். துணை சபாநாயகர் பதவியை மரபுப்படி எதிர்க்கட்சிகளுக்கு வழங்க பாஜக மறுத்துவிட்டது. இதனால் இந்தியா கூட்டணி, தேசிய ஜனநாயக கூட்டணியின் சபாநாயகர் வேட்பாளர் ஓம் பிர்லாவுக்கு ஆதரவு அளிக்காமல் தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளது. இதன் மூலம் இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறையாக மக்களவை சபாநாயகர் பதவிக்குத் தேர்தல் நடைபெற உள்ளது. நாளை (26.06.2024) சபாநாயகர் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.