மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ இந்திய அணிக்காக விளையாடும் வீராங்கனைகளை டெல்லியில் நேற்று சந்தித்தார். அப்போது விளையாட்டு வீராங்கனைகளுடன் ஆலோசனை செய்தார். அவர்களின் குறைகளை கேட்டறிந்த அமைச்சர் விரைவில் தீர்வு காணப்படும் என உறுதியளித்தார். அதனைத் தொடர்ந்து குத்துச்சண்டை சாம்பியனான மேரிகோமை சந்தித்தார். விளையாட்டு வீராங்கனை மேரிகோம் தன்னுடன் குத்துச்சண்டை விளையாட வருமாறு அமைச்சருக்கு அழைப்பு விடுத்தார்.
இதனையடுத்து அமைச்சர் கிரண் ரிஜிஜூ மேரிகோமிடம் சிறிது நேரம் குத்துச்சண்டை பயிற்சியில் ஈடுபட்டார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் 6 முறை உலக சாம்பியன்ஷிப் வென்ற குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோம் தன்னைப் போட்டிக்கு அழைத்த போது தனக்கு பயமாக இருந்ததாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜுஜு விளையாட்டாக தெரிவித்துள்ளார். மேலும் கூறிய அமைச்சர் தான் தயங்கிய படியே நின்றதாகவும், சில நிமிடம் பயந்து விட்டதாகவும், பின் தான் பெண்களிடம் சண்டையிடுவதில்லை எனக் கூறி அங்கிருந்து தப்பியதாகவும் வேடிக்கையாக தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.