Union Minister Dharmendra Pradhan shared the letter from the TN govt

மத்திய அரசின் இந்த ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடரின் 2ஆம் கட்ட அமர்வு நாடாளுமன்றத்தில் நேற்று (10.03.2025) தொடங்கியது. அப்போது தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக பரபரப்பான காரசார விவாதம் நடைபெற்றது. அப்போது மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், “தேசிய கல்விக் கொள்கை மூலம் இந்தி திணிக்கப்படுவதாக வைக்கப்படும் குற்றச்சாட்டுத் தவறானது. தேசிய கல்விக் கொள்கை விவகாரத்தில் மாணவர்களை திமுக தவறாக வழிநடத்துகிறது. தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்தை மாநில அரசு பாழடித்து வருகிறது. பிஎம்ஸ்ரீ திட்டத்தில் கையெழுத்திட வந்த தமிழ்நாடு கடைசி நேரத்தில் யூ-டர்ன் போட்டது.

மொழியை வைத்து அரசியல் செய்கிறார்கள். இவர்கள் ஜனநாயகம் அற்றவர்கள், அநாகரீகமானவர்கள் (undemocratic, uncivilized)” என இருமுறை குறிப்பிட்டார். மேலும் அவர், “சூப்பர் முதல்வரின் பேச்சைக் கேட்டுக் கையெழுத்திட மறுத்தனர். யார் அந்த சூப்பர் முதல்வர் என்பதைக் கனிமொழிதான் கூறவேண்டும். பாஜக ஆளாத மாநிலங்களிலும் புதிய கல்விக் கொள்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது” என்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்பிக்கள், ‘தமிழ்நாட்டிற்குக் கல்வி நிதி வேண்டும்’ என முழக்கமிட்டனர். இதனால் சிறிது நேரம் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பேசிய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், “தனது பேச்சு காயப்படுத்தி இருந்தால் அநாகரிகமானவர்கள் என்ற வார்த்தையைத் திரும்பப் பெறுகிறேன்” எனத் தெரிவித்தார்.

Advertisment

இந்நிலையில் மாநிலங்களவையில் தேசிய கல்விக் கொள்கை மீதான விவாதம் இன்று (11.03.2025) நடைபெற்றது. அப்போது மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசுகையில், “நான் கூறிய கருத்து யாருடைய மனதையாவது புண்படுத்தி இருந்தால் அதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அதற்காக 100 முறை கூட மன்னிப்பு கேட்கத் தயாராக இருக்கிறேன். தேசிய கல்விக் கொள்கை மூலம் எந்த மொழியையும் மத்திய அரசு திணிக்க முயலவில்லை. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் எதிரானது இல்லை. தமிழை நானும் விரும்புகிறேன். தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் படிப்போர் எண்ணிக்கை குறைந்து வருகிறார்கள். காலனித்துவ மொழியான ஆங்கிலம் ஆதிக்கம் பெற்று வருகிறது.

அதாவது தமிழக அரசுப் பள்ளிகளில் தமிழ்மொழிக் கல்வி சரிவைச் சந்தித்து வருகிறது. இந்தியாவின் வரலாற்றைப் பற்றி பெருமிதம் கொள்ளாதவர்களை நாம் என்ன செய்வது?. திமுக எம்.பி.க்கள் தனி உலகத்தில் வாழலாம். ஆனால் இதுவே உண்மை ஆகும். இந்தி கற்க ஆர்வமாக உள்ளதாக நாமக்கல்லைச் சேர்ந்த பெண் ஒருவர் கூறினார். இதுவே புதிய தமிழ்நாடு. தமிழகத்தில் உள்ள 774 சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் இந்தி பயிற்றுவிக்கப்படுகிறது. அதே சமயம் 900 பள்ளிகளில் தெலுங்கு மற்றும் 350 பள்ளிகளில் உருது 3வது மொழியாகப் பயிற்றுவிக்கப்படுகிறது. தமிழகத்தில் சிறுபான்மையினருக்காக 1500 பள்ளிகள் உள்ளன. நாடாளுமன்றத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என நீங்கள் சொல்லித் தரத் தேவையில்லை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவைச் சட்டப்பேரவையில் எப்படி நடத்தினீர்கள் என்பது பற்றித் தெரியும்” எனப் பேசினார்.

Union Minister Dharmendra Pradhan shared the letter from the TN govt

Advertisment

மேலும் பி.எம். ஸ்ரீ பள்ளித் திட்டம் தொடர்பாகத் தமிழக அரசு சார்பில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் அப்போதைய தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா எழுதிய கடிதம் ஒன்றையும் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்டுள்ளார்.